SELANGOR

கால்வாயில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடு காணாமல் போன ஆடவருடையதா? போலீஸ் விசாரணை

சிப்பாங், செப் 8- கிள்ளான், ஜாலான் கெபுனில் பள்ளி அருகே உள்ள
கால்வாயில் கடந்த மாதம் 27ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடு
இரு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட
ஆடவருடையதா என்பதைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் போலீசார்
தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த எலும்புக்கூடு காணாமல் போனவருடையதா? என்பது டி.என்.ஏ.
எனப்படும் மரபணு சோதனை மூலம் இன்னும் இரு வாரங்களில்
கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர்
டத்தோ ஹூசேன் ஓமா கான் கூறினார்.

கால்வாயில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டின் வயதையொத்த உள்நாட்டு
ஆடவர் ஒருவர் காணாமல் போனது தொடர்பில் புகார்
செய்யப்பட்டுள்ளதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். அந்த எலும்புக்கூடு
காணாமல் போன ஆடவருடையதா என்பது மரபணு சோதனை மூலம்
தெரிந்து விடும் என அவர் தெரிவித்தார்.

இங்குள்ள சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நேற்று
நடைபெற்ற கைப்பற்றப்பட்ட பொருள்களை அழிக்கும் நடவடிக்கையை
பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

கிள்ளான், ஜாலான் கெபுனில் உள்ள பள்ளி ஒன்றின் அருகே உள்ள
கால்வாயில் மனித மண்டையோடும் எலும்புக்கூட்டின் ஒரு பகுதியும்
கண்டு பிடிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அந்த எலும்புக்கூட்டின் மீது தடயவியல் சோதனையை மேற்கொள்ளும்
பணி முற்றுப்பெற்ற நிலையில் இறந்தவர் யார் என்பது இன்னும்
அடையாளம் காணப்படவில்லை என்று ஹூசேன் தெரிவித்திருந்தார்.


Pengarang :