SELANGOR

வான் போக்குவரத்து நாடாக உருவாகும் இலக்கை அடைய சிலாங்கூருடன் மத்திய அரசு கைக்கோர்க்கும்

ஷா ஆலம், செப் 7- மலேசியாவை வான் போக்குவரத்து துறையில்
மேம்படுத்த சிலாங்கூர் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை மத்திய
அரசு அங்கீகரித்துள்ளது. அதே சமயம், மலேசியா தலைசிறந்த வான்
போக்குவரத்து நாடாக உருவாக்கம் காண்பதற்கு ஏதுவாக மாநில அரசுடன்
இணைந்து செயல்படுவதற்குரிய கடப்பாட்டையும் அது
வெளிப்படுத்தியுள்ளது.

பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தின் இலக்கிற்கு ஏற்ப 2030 மலேசிய
வான் தொழில்துறை பெருந்திட்டம் மற்றும் முதலாவது சிலாங்கூர்
திட்டம் ஆகியவற்றின் மூலம் இதனை சாத்தியமாக்க முடியும் என்று
முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் துறை துணையமைச்சர் லியு
சின் தோங் கூறினார்.

நமது நோக்கம் தெளிவானது. மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான
வியூக உந்து சக்திகளில் ஒன்றாக வான் போக்குவரத்துத் துறை
அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மொத்த உற்பத்தி மற்றும் வேலை
வாய்ப்புகளின் வாயிலாக மக்கள் பயன்பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்படும்
என அவர் சொன்னார்.

இன்று இங்கு 2023 சிலாங்கூர் வான் போக்குவரத்து கண்காட்சியின்
(எஸ்.ஏ.எஸ்.) தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு
தெரிவித்தார்.

அண்மையில் அறிவிக்கப்பட்ட 2030 புதிய தொழில்துறை பெருந்திட்டம்
உற்பத்தித் துறைக்கு புத்துயிரூட்டி மதிப்புக் கூட்டப்பட்ட அதன்
வருமானத்தை 58,750 கோடி வெள்ளியாக உயர்த்துவதையும் இலக்காக
கொண்டுள்ளது. அதில் வான் போக்குவரத்துத் துறையும் முக்கியமான
துறைகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது என அவர்
சொன்னார்.

இந்நாட்டில் வான்போக்குவரத்து துறையை மேம்படுத்துவது மத்திய
மற்றும் மாநில அரசுகளின் கூட்டு தொலை நோக்கு இலக்காகும் என்றும்
அவர் கூறினார்.

நாட்டின் வான் போக்குவரத்து நடவடிக்கைகளில் 67 விழுக்காடு
சிலாங்கூரில் மேற்கொள்ளப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.


Pengarang :