SELANGOR

பெருந்தொற்றுக்கு முந்தைய சுற்றுப்பயணிகள் எண்ணிக்கையை அடுத்தாண்டில் எட்டமுடியும்- சிலாங்கூர் நம்பிக்கை

ஷா ஆலம், செப் 7- உலகளாவிய அளவில் பயணக் கட்டுப்பாடுகள்
தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சிலாங்கூருக்கு வருகை புரியும்
சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை பெருந்தொற்றுக்கு முந்தைய அளவை
அடுத்தாண்டில் எட்ட முடியும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டில் 70 லட்சம் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை ஈர்க்க
முடியும் என தாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக டூரிசம் சிலாங்கூர்
தலைமைச் செயல்முறை அதிகாரி அஸ்ருள் ஷா முகமது கூறினார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவுவதற்கு
முன்பு இதே எண்ணிக்கையிலான சுற்றுப்பயணிகள் சிலாங்கூருக்கு
வருகை புரிந்ததாக அவர் சொன்னார்.

அதற்கு முன்னர் ஆண்டு தோறும் 59 லட்சம் சுற்றுப்பயணிகளை மாநிலம்
ஈர்த்து வந்தது. அதே சமயம் உள்நாட்டுச் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை
ஆண்டுக்கு 2 கோடியே 40 லட்சம் பேராக இருந்தது என்று அவர்
குறிப்பிட்டார்.

மாநிலத்திற்கு தரக்கூடிய சுற்றுப்பயணிகள் எண்ணிக்கைப் பற்றிய தரவுகள்
என்னிடம் இல்லை. இருந்த போதிலும் சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்கான
ஊக்குவிப்பு நடவடிக்கைளில் டூரிசம் மலேசியாவுடன் இணைந்து
மேற்கொண்டு வருகிறோம் என அவர் தெரிவித்தார்.

கோலாலம்பூர் அனைத்துலக வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில்
நேற்று நடைபெற்ற மாட்டா எனப்படும் சுற்றுலா மற்றும் பயண நிறுவன
முகவர்கள் சங்கத்தின் கண்காட்சியில் கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இந்த சுற்றுலா கண்காட்சி குறித்து கருத்துரைத்த அஸ்ருள், சிலாங்கூர்
சுற்றுலா நடத்துனர்கள் பங்கேற்கும் இந்த கண்காட்சியின் வழி 70,000

சுற்றுப் பயணிகளை மாநிலத்திற்கு ஈர்க்க முடியும் என நம்பிக்கைத்
தெரிவித்தார்.


Pengarang :