NATIONAL

காதலியைக் கொன்ற வழக்கு – சிவசங்கருக்கு தூக்குத் தண்டனைக்கு மாற்றாக 40 ஆண்டுச் சிறை

புத்ரா ஜெயா, செப் 27- ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் தன் காதலியைக்
கொலை செய்த குற்றத்திற்காக விதிக்கப்பட்ட தூக்குத்
தண்டனையிலிருந்து முன்னாள் பஸ் ஓட்டுநர் ஒருவர் தப்பினார்.

எனினும், எம்.சிவசங்கர் என்ற அந்த நபருக்கு மரண தண்டனைக்கு
மாற்றாக இங்குள்ள கூட்டரசு நீதிமன்றம் 40 ஆண்டுச்
சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளும் வழங்கித் தீர்ப்பளித்தது.

முப்பத்தொன்பது வயதான சிவசங்கருக்கு விதிக்கப்பட்ட
மரணதண்டனையை தங்களின் விவேகத்திற்குட்பட்டு
சிறைத்தண்டனையாக மாற்றுவதாக டத்தோ மேரி லிம் தியாம் சுவான்
மற்றும் டத்தோ அபு பாக்கார் ஜாய்ஸ் ஆகியோர் கொண்ட அமர்வுக்கு
தலைமை தாங்கிய மலாயா தலைமை நீதிபதி டான்ஸ்ரீ முகமது ஜபிடின்
முகமது டியா தனது தீர்ப்பில் கூறினார்.

நாட்டில் மரணதண்டனையை அகற்றும் சட்டம் கடந்த ஜூலை மாதம்
4ஆம் தேதி அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த மூன்று நீதிபதிகளை
உள்ளடக்கிய அமர்வு இந்த முடிவை அறிவித்தது. கட்டாய மரண
தண்டனைக்கு பதிலாக 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
விதிக்க புதிய சட்டம் வகை செய்கிறது.

ஐந்து பிள்ளைகளுக்கு தந்தையான சிவசங்கர் கைது செய்யப்பட்ட
தினமான 2016ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி முதல் தண்டனையை
அனுபவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி பிற்பகல் 12.15 மணியளவில்
பாசீர் கூடாங், தாமான் சைன்டெக்சில் உள்ள ஒரு வீட்டில் வி. துர்கா
தேவி (வயது 23) என்ற பெண்ணை படுகொலை செய்த குற்றத்திற்கு
சிவசங்கருக்கு ஜோகூர் பாரு உயர்நீதிமன்றம் கடந்த 2021ஆம் ஆண்டு
பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி மரண தண்டனை விதித்தது.

அவருக்கு எதிரான தண்டனையை மேல் முறையீட்டு நீதிமன்றம் கடந்த
2022ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி நிலை நிறுத்தியது.


Pengarang :