ANTARABANGSA

கெடாவில் வெள்ளம்- 228 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம், அபாயக் கட்டத்தில் நான்கு ஆறுகள்

அலோர்ஸ்டார், செப் 28- கெடா மாநிலத்தில் வெள்ளத்தில்
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்றிவு நிலவரப்படி மூன்று மாவட்டங்களில் 69 குடும்பங்களை சேர்ந்த
288 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு 12.00 மணி வரை பதிவான எண்ணிக்கை இதுவாகும்
என்று மலேசிய பொது தற்காப்பு படையின் கெடா மாநில துணை
இயக்குநர் மேஜர் முகமது முவாஸ் முகமது யூசுப் கூறினார்.

சங்லுன் தேசிய இடைநிலைப்பள்ளி மற்றும் கம்போங் திராடிசி மண்டம்
ஆகிய இடங்களில் புதிதாக இரு துயர் துடைப்பு மையங்கள் நேற்று
திறக்கப்பட்டதாக கூறிய அவர், இதில் 51 குடும்பங்களைச் சேர்ந்த 177 பேர்
தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இதனிடையே, கோத்தா ஸ்டார் மாவட்டத்தின் தாமான் ஸ்ரீ பாகான்
மண்டபத்தில் நேற்றிரவு திறக்கப்பட்ட துயர் துடைப்பு மையத்தில் எட்டு
குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் அடைக்கலம் நாடியுள்ளதாக நேற்றிரவு
வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

பெண்டாங் மாவட்டத்தின் கம்போங் பத்து ஹம்பார் கானான், கம்போங்
பெலக்காங் பெண்டாங் மற்றும் கம்போங் பொங்கோல் கம்பிங் ஆகிய
கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என்று அவர் மேலும் சொன்னார்.

இதனிடையே, கெடாவில் உள்ள நான்கு ஆறுகளில் நீர்மட்டம் அபாயக்
கட்டத்தை தாண்டி விட்டதை மாநில வடிகால் மற்றும் நீரபாசனத்
துறையின் ஆய்வுகள் காட்டுகின்றன. இதனைத் கருத்தில் கொண்டு
வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக
பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறும்படி கேட்டுக்
கொள்ளப்படுகின்றனர்.

கெடா மாநிலத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக பொது தற்காப்பு
படையின் 603 உறுப்பினர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு 13
லோரிகள், 83 மீட்புப் படகுகள், எட்டு அம்புலன்ஸ் வண்டிகளும் தயார்
நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


Pengarang :