SELANGOR

டிங்கி காய்ச்சல் பரவலை எதிர்த்துப் போராட பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை – சுபாங் ஜெயா மாநகராட்சி

சுபாங் ஜெயா, செப் 27 – டிங்கி காய்ச்சல் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கு  மாநகர  மன்றத்திற்கு  ஒத்துழைப்பு  வழங்குமாறு பொதுமக்களைச் சுபாங் ஜெயா மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.

38 வது தொற்றுநோய் வாரத்தில் 5,936 டிங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு உடன் ஒப்பிடும்போது 41.2 சதவீதம் அதிகமாகும் என்று மேயர் முகமட் ஃபௌசி முகமட் யாதிம் கூறினார்.

“குடிமக்கள் அதிக ஈடுபாடு காட்டுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். மாநகராட்சி மட்டும் முயற்சி செய்தால் எந்தப் பயனும் இல்லை, காரணம் குடியிருப்பாளர்களின் பங்கேற்பும்  வேண்டும்,”  என்று அவர் நேற்று சுபாங் ஜெயா மாநகராட்சி தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு இவ்வாறு கூறினார்.

சுபாங் ஜெயா மாநகராட்சி நிர்வாகப் பகுதிகளில் எட்டு ஹாட்ஸ்பாட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் ஃபௌசி கூறினார்.

டிங்கி பரவுவதைத் தடுக்க, ஏடிஸ் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிப்பதில் வாரத்திற்கு குறைந்தது 10 நிமிடங்கள் செலவிடுவது நல்லது.

சுபாங் ஜெயா மாநகராட்சியின் சுகாதாரத் துறையால் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்ட தாகவும், முயற்சிகள் நேர்மறையான முடிவுகளைத் தரும் என்று நம்பிக்கை தெரிவித்ததாகவும் ஃபௌசி மேலும் கூறினார்.


Pengarang :