NATIONAL

முதலாவது சிலாங்கூர் திட்டம்- இந்தோனேசியாவுடன் இணைந்து முதலீடு செய்ய சிலாங்கூர் தயார்

ஷா ஆலம், செப் 27- தென்கிழக்காசியாவின் நுழைவாயிலாக திகழ்வதற்கு
ஏதுவாக முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள
துறைகளில் இந்தோனேசியாவுடன் இணைந்து பங்கேற்க சிலாங்கூர்
மாநில அரசு தயாராக உள்ளது.

விவேக மற்றும் பசுமைத் தொழிலியல் பூங்கா, மாற்று எரிசக்தி, உணவு
உத்தரவாதம், கட்டுப்படி விலை வீடமைப்புத் திட்டம் மற்றும் விவேக நகர்
ஆகியவை முதலீட்டு வாய்ப்புள்ள திட்டங்களாக கருதப்படுவதாக மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த திட்டத்தின் மூலம் அதிகமான வெளிநாட்டு முதலீடுகளை
சிலாங்கூருக்கு கொண்டு வர முடியும். மேலும், மற்ற மாநிலங்களும் அந்த
குடியரசுடன் வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்குரிய
வாய்ப்பினையும் ஏற்படுத்த இயலும் என அவர் குறிப்பிட்டார்.

அனைவரும் ஒருவருக்கொருவர் போட்டியிட்டாலும் இந்த நூற்றாண்டை
தென்கிழக்காசியாவுக்கான நூற்றாண்டாக உருவாக்குவதற்கான
முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய தருணம் இதுவாகும் என்றார்
அவர்.

முன்னதாக அவர், சிலாங்கூரைத் தென்கிழக்காசியாவின் நுழைவாயிலாக
உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தோனேசியாவின்
அனைத்துலக வர்த்தக மற்றும் தொழிலியல் மன்றத்தின் தலைவர்
யோஹனேஸ் லுக்கிமானை ஜாகர்த்தாவில் சந்தித்தார்.

மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி, இன்வெஸ்ட் சிலாங்கூர்
தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ ஹசான் அஸ்ஹாரி,
சிலாங்கூர் பொது நூலகக் கழகத் தலைவர் டத்தின் படுகா மஸ்துரா
முகமது ஆகியோரும் மந்திரி புசாரின் இந்த பயணக் குழுவில் இடம்
பெற்றுள்ளனர்.


Pengarang :