NATIONAL

எக்ஸ் நோய் பரவல் சாத்தியத்தை எதிர்கொள்ள முழு தயார் நிலையில் சுகாதார அமைச்சு

புத்ராஜெயா, அக் 3-  நாட்டில் எக்ஸ் நோய் பரவல் குறித்து சுகாதார அமைச்சு  விழிப்பு நிலையில் உள்ளதோடு அதனைச் சமாளிக்க முழு அளவிலான தயார் நிலையைக் கொண்டுள்ளது என்று சுகாதார துறை தலைமை இயக்குநர்  டத்தோ 
டாக்டர் முகமது ராட்ஸி அபு ஹாசன் கூறினார்.

இந்த நோயைப் பற்றி பொதுமக்கள் அதிகம் கவலைப்பட வேண்டாம் என்று நேற்று 
இங்கு  நடைபெற்ற  மலேசிய உணவு வழிகாட்டி தொடர் மற்றும் 'பெண்களுக்கான   ஆரோக்கியமான உணவுப் பொறுப்பு' எனும் நிகழ்வின்  தொடக்க விழாவிற்குப் பிறகு 
இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

அண்மையில் நடைபெற்ற   ஐக்கிய நாடுகள்  சபையின் 76வது மாநாட்டில் இந்த 
எக்ஸ்  நோய் முக்கிய விவாதப் பொருளாக விளங்காவிட்டாலும் இந்த நோய் வரக்கூடிய சாத்தியம் குறித்து மலேசியா எச்சரிக்கையாக உள்ளது.

கோவிட்-19, நிப்பா வைரஸ், சார்ஸ் மற்றும் மெர்ஸ்-கோவி போன்ற முந்தைய நோய்த் தொற்றுகளை கையாண்டதன் மூலம் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த நோயையும் திறம்பட சமாளிக்க முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.

அது தவிர,  நோயைச் சமாளிப்பதற்கு  ஏதுவாக மலேசிய சுகாதாரத் துறை எப்போதும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நோய்த் தொற்றுகள் பற்றிய தகவல்கள் 
எப்போதும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அதே சமயம்,  இந்நோயை எதிர் கொள்ளும் வகையில் பொது மக்கள் இந்நோய் பற்றி அறிந்திருப்பதும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதுவதும் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

உலகளாவிய நிலையில் தொற்றுநோயை ஏற்படுத்தும் திறன் கொண்ட அறியப்படாத   ஒரு நோய்க்கிருமிக்கு எக்ஸ் நோய் என உலக சுகாதார அமைப்பு (WHO) கடந்த 2018 இல் பெயரிட்டது.

எக்ஸ் நோயின் தன்மை மற்றும் நேரம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை 
என்றாலும் நோயின் தாக்கம் குறித்து சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Pengarang :