SELANGOR

ரிபோர்மாசி கோட்டையாகக் கோம்பாக் தொடர்ந்து விளங்குவதை உறுதி செய்வேன்- அமிருடின் சூளுரை

ஷா ஆலம், அக் 3- கெஅடிலான் கட்சி மற்றும் ரிபோர்மாசி இயக்கத்தின்
வலுவான கோட்டையாகக் கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதி தொடர்ந்து
விளங்குவதை தாம் உறுதி செய்யவுள்ளதாக அத்தொகுதி நாடாளுமன்ற
உறுப்பினர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த காலங்களில் அயராது பாடுபட்ட அனைத்து தொகுதி
தலைவர்களுக்கும் தாம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக
நேற்று நடைபெற்ற கோம்பாக் கெஅடிலான் தொகுதி கூட்டத்தை
முன்னிட்டு எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவேற்றிய குறிப்பில் அவர்
குறிப்பிட்டார்.

கடந்த ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற மாநிலத் தேர்தல் உள்பட
பல்வேறு சவால்களைக் எதிர்கொள்வதில் காட்டிய மனவுறுதிக்காக
அவர்களை தாம் பெரிதும் போற்றுவதாக அவர் தெரிவித்தார்.

இறைவன் அருளால் கோம்பாக் கெஅடிலான் தொடர்ந்து வலுவான
சக்தியாக விளங்கும். ரிபோர்மாசி இயக்கம் மற்றும் கெஅடிலான்
கட்சியின் வலுவான கோட்டையாக கோம்பாக் தொடர்ந்து விளங்குவதற்கு
ஏதுவாக நாம் கடுமையாக உழைக்கும் அதேவேளையில் மக்களுக்கான
சேவையையும் தீவிரப்படுத்துவோம் என அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற நாடாளுன்றத் தேர்தலின் போது
கோம்பாக் தொகுதி நாட்டு மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கும்
தொகுதியாக விளங்கியது. இந்த தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள
முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி
களமிறங்கிய வேளையில் அவரை எதிர்த்து அமிருடின் போட்டியிட்டார்.

கடந்த 2020ஆம் ஆண்டில் பக்கத்தான் அரசாங்கம் கவிழ்வதற்குக் காரணமாக
ஷெரட்டோன் நகர்வின் மூளையாகச் செயல்பட்டவரான அஸ்மின்
அத்தேர்தலில் அமிருடினிடம் தோல்வி கண்டார்.


Pengarang :