NATIONAL

அரிசியைப் பதுக்கினால் சட்ட நடவடிக்கை- பிரதமர் எச்சரிக்கை

பெந்தோங், அக் 3- நாட்டில் அரிசியைப் பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபடும்
தரப்பினர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.

இவ்விவகாரம் மீது அமலாக்கத் தரப்பினர் தீவிர கண்காணிப்பை
மேற்கொண்டு குற்றமிழைப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை
எடுப்பதை உறுதி செய்யும்படி விவசாய மற்றும் உணவு உத்தரவாதத்
துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபுவை தாம் பணித்துள்ளதாக அவர்
சொன்னார்.

அரிசி மக்களின் பிரச்சனையாக உள்ளது. இந்தோனேசிய அதிபர்
ஜோக்கோவியும் அரிசி விலை உயர்வை அறிவித்துள்ளார். காரணம்,
அரிசியை ஏற்றுமதி செய்யும் 18 நாடுகள் அதனை தடுத்துள்ளன,
நிறுத்தியுள்ளன அல்லது குறைத்துள்ளன.இதனால் தேவை மற்றும்
விநியோகத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அதோடு மட்டுமின்றி சில தரப்பினர் அரிசியைப் பதுக்குகின்றனர், சேமித்து
வைக்கின்றனர். அரிசியைப் பெறுவதில் மக்கள் சிரமத்தை
எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் இத்தகைய இழிவான செயலை நீங்கள்
புரிந்தால், நாங்கள் உங்களைத் தேடி வருவோம். உங்களை நீதிமன்றத்தில்
நிறுத்துவோம் என்று அவர் குறிப்பிட்டார்.

பெலாங்கை சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு இங்குள்ள சிம்பாங்
பெலாங்கை சதுக்கத்தில் நேற்றிரவு நடைபெற்ற மடாணி மெகா
ஒற்றுமைப் பேரணியில் உரையாற்றும் போது பக்கத்தான் ஹராப்பான்
கூட்டணித் தலைவருமான அவர் இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்வில் பாரிசான் நேஷனல் தலைவரும் துணைப் பிரதமருமான
டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி, பெலாங்கை தொகுதி தேசிய
முன்னணி வேட்பாளர் டத்தோ அமிஸார் அபு ஹடாம் ஆகியோரும்
கலந்து கொண்டனர்.


Pengarang :