SELANGOR

ஹோட்டல் உதவி நிர்வாகிக்கு எதிராக மானபங்கக் குற்றச்சாட்டு

பெட்டாலிங் ஜெயா, அக் 3- தனியார் தொலைக்காட்சி நிலையத்தின்
முன்னாள் செய்தி வாசிப்பாளரான பெண்ணை மானபங்கப் படுத்தியதாக
ஹோட்டல் ஒன்றின் உதவி நிர்வாகி மீது இங்குள்ள மாஜிஸ்திரேட்
நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

இவ்வாண்டு ஜூலை மாதம் 13ஆம் தேதி பிற்பகல் 1.00 மணியளவில்
டாமன்சாராவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தனது சகப் பணியாளரான
அந்த 54 வயதுப் பெண்ணை மானப்பங்கப்படுத்தும் நோக்கில்
பலாத்காரத்தைப் பயன்படுத்தியதாக கொண்டு வரப்பட்டக் குற்றச்சாட்டை
முகமது ஃபைசால் ஹூசேன் (வயது 53) என்ற அந்த ஆடவர் மறுத்து
விசாரணை கோரினார்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டுகள் வரையிலான
சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி விதிக்க வகை
செய்யும் தண்டனைச் சட்டத்தின் 354வது பிரிவின் கீழ் அவர் மீது
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட முகமது ஃபைசாலை ஒரு நபர் உத்தரவாதத்துடன்
4,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய மாஜிஸ்திரேட்
ஸஃப்ரான் ரஹிம் ஹம்சா, வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 20ஆம்
தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Pengarang :