NATIONAL

மின் மோட்டார் சைக்கிள் வாங்க பி40 தரப்பினருக்கு ஊக்கத் தொகை- அமைச்சு பரிந்துரை

கோலாலம்பூர், அக்டோபர் 5 – மின்சார வாகனங்கள் (EV) குறிப்பாக மின்-மோட்டார் சைக்கிள்கள் வாங்குவதற்கு 2024 வரவு செலவுத் திட்டத்தில் ஊக்கத்   தொகை வழங்குவது குறித்து முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு பிரிந்துரையை முன்வைத்துள்ளது.

நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தேச ஊக்கத்தொகை பரிந்துரை, குறைந்த வருமானம் பெறும் பி40  தரப்பினரை இலக்காக் கொண்டிருக்கும் என்று  அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் (தொழிலியல்) டத்தோ ஹனாபி சக்ரி கூறினார்.

இவ்விவகாரத்தில் சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகிறோம். மின் வாகனத் தொழில்துறையின் வளர்ச்சிக்கு நிதி அமைச்சு ஆதரவளிக்கும் என  முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு  நம்புகிறது என்று அவர் நேற்று இங்கு நடைபெற்ற சர்வதேச மின்சார வாகனக் கண்காட்சியின்போது  செய்தியாளர்களிடம் கூறினார்.

மின்சார வாகனத் தொழில்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி குறித்து கருத்துரைத்த அவர், தேவை மற்றும் விநியோகம் ஆகியவற்றின் அடிப்படையில் தொழில்துறையை மேம்படுத்த அரசாங்கம் கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் பல சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது என்றார்.

மலேசியாவில் இரு சக்கர மின் வாகனங்களுக்கான சந்தை இன்னும் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. எனவே,  2024  வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள  உதவித் தொகைத் திட்டம்  உள்ளிட்ட முயற்சிகள் மலேசியாவில் மின் வாகனப் பயன்பாட்டை   அதிகரிக்கும் என நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் 10,000 இ.வி. மின் சார்ஜிங் நிலையங்களை நாடு முழுவதும் உருவாக்குவதை மலேசியா நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் 1,000 நேரடி மின்னோட்ட விரைவு சார்ஜர்கள் மற்றும் 9,000 மாற்று மின்னோட்ட சார்ஜர்களும் அடங்கும்.


Pengarang :