SELANGOR

153 பேர் பல்வேறு துறைகளில் பணியாற்ற ஏற்றுக்கொள்ளப் பட்டனர் -ஜெலாஜா கெர்ஜாயா

ஷா ஆலம், அக் 6: சிலாங்கூர் ஊழியர் ஆற்றல் மேம்பாட்டு துறை (UPPS) ஏற்பாடு செய்த ஜோப் கேரின் நான்காம் தொடர் மூலம் நேர்காணல்களில் கலந்து கொண்ட 907 நபர்களில் 153 பேர் பல்வேறு துறைகளில் பணியாற்ற ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.

ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கிய ஜெலாஜா கெர்ஜாயாவில் பங்கேற்ற 481 நபர்கள் இரண்டாவது நேர்காணலில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர் என அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.விஜயன் கூறினார்.

“பொதுமக்கள், குறிப்பாக வேலை தேடுபவர்கள் மற்றும் பல்கலைக் கழகப் பட்டதாரிகள் தங்களுக்கு அருகிலுள்ள இடத்தில் ஏற்பாடு செய்யப்படும் இந்த ஜெலாஜா கெர்ஜாயாவில் பங்கேற்கும் வாய்ப்பை தவறவிடாமல் கலந்து கொண்டு ஆதரவு அளித்தனர்.

“ஒவ்வொரு இடத்திலும், மொத்தம் 81 முதலாளிகளின் பங்கேற்புடன் 3,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்திற்கு வெற்றிகரமாக ஒத்துழைப்பு வழங்கிய முதலாளிகளுக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இதுவரை சைபர்ஜெயா பல்கலைக்கழகம், சிப்பாங், கோம்பாக் சமூக மையம்; யாயாசான் சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா மற்றும் பாதுகாப்பு ஓட்டுநர் மையம் (செல்), பெட்டாலிங் ஜெயா ஆகிய இடங்களில் ஜெலாஜா கெர்ஜாயா நடத்தப்பட்டது.

அந்த நான்கு இடங்களில் ஈடுபட்டிருந்த நிறுவனங்களில் பிரசரண மலேசியா பெர்ஹாட், மைடெக்சி எஸ்டிஎன் பிஎச்டி, கெர்பாங் அலஃப் உணவகம் எஸ்டிஎன் பிஎச்டி, தி சிக்கன் ரைஸ் ஷாப், ஏயோன் கோ (எம்) பிஎச்டி மற்றும் 7-லெவன் மலேசியா எஸ்டிஎன் பிஎச்டி, 99 ஸ்பிட்மார்ட் எஸ்டிஎன் பிஎச்டி, அவிசேனா சுகாதார மையம், பாங்கி ரெசோட் எஸ்டிஎன் பிஎச்டி, புக்கிட் திங்கி மருத்துவமனை மற்றும் பெர்டுவா ஆகியவை அடங்கும்.

முன்னதாக, மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜெலாஜா கெர்ஜாயா மூலம் சிலாங்கூர் மக்களுக்கு 20,000 வேலை வாய்ப்புகள் வழங்கப் பட்டதாகச் சிலாங்கூர் ஊழியர் அதிகாரமளிக்கும் பிரிவு அறிவித்தது.

அடுத்த, அக்டோபர் 21 அன்று ஹம்சா மண்டபம், கிள்ளானில் நடத்தப்படவுள்ள இத்திட்டத்தில் சமூகப் பாதுகாப்பு அமைப்பின் கூட்டு முயற்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 120 உள்ளூர் நிறுவனங்கள் கலந்து கொள்ளும்.


Pengarang :