NATIONAL

வேலையிட பாகுபாடு, பட்ஜெட் விவாதத்திற்கு இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தில் முன்னுரிமை

கோலாலம்பூர், அக் 16- வேலையிட பாகுபாடு தொடர்பில் சிறப்புச்
சட்டத்தை வரைவதற்கான திட்டத்தை அரசாங்கம் கொண்டுள்ளதா?
என்பது உள்ளிட்ட விவகாரங்களுக்கு இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்
தொடரில் முன்னுரிமை அளிக்கப்படும்.

இன்றைய அமர்வின் போது செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர்
வில்லியம் லியோங் ஜீ இதன் தொடர்பான கேள்வியை மனிதவள
அமைச்சரிடம் எழுப்புவார். உடல் மற்றும் மனோரீதியாக ஆற்றல்
இல்லாதவர்களைப் பாதுகாப்பதற்கான சட்டப் பரிந்துரைகளையும் அவர்
முன்வைப்பார் என்று நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில்
வெளியிடப்பட்டுள்ள இன்றைய அமர்வின் நிகழ்ச்சி நிரலில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2018 முதல் 2023 வரை திவேட் எனப்படும் தொழில்நுட்ப மற்றும்
தொழில்திறன் பயிற்சி திட்டத்தின் வாயிலாக பட்டம் பெற்ற
மாணவர்களின் எண்ணிக்கை குறித்து சுங்கை பெசார் பெரிக்கத்தான்
நேஷனல் தொகுதி உறுப்பினர் டத்தோ முஸ்லிமின் யாஹ்யா உயர்கல்வி
அமைச்சரிடம் கேள்வியெழுப்புவார்.

வரும் 2024ஆம் ஆண்டிற்கான உத்தேச முதலீட்டு மதிப்பீடு குறித்து
முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சரிடம் ஜெலுபு தொகுதி
தேசிய முன்னணி உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ்
வினவுவார்.

மேலும், கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டுமின்றி அனைத்து
மாநிலங்களுக்கும் வெளிநாட்டு முதலீடுகளைப் பரவலாக்குவதற்கு
அமைச்சு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கம்
கோருவார்.

இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல்
செய்துள்ள நிலையில் அதன் தொடர்பான விவாதம் இன்று தொடங்கி
நடைபெறவுள்ளது.


Pengarang :