SELANGOR

செந்தோசா தொகுதியில் ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளைப் பெற 900 பேர் விண்ணப்பம்

கிள்ளான், அக் 16- தீபாவளியை முன்னிட்டு செந்தோசா தொகுதிக்கு மாநில
அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஜோம் ஷோப்பிங் பற்றுச்
சீட்டுகளுக்கான கோட்டா முழுமை பெற்று விட்டதாகத் தொகுதி சட்டமன்ற
உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

இவ்வாண்டு தீபாவளி ஷோம் ஷோப்பிங் திட்டத்திற்காகச் செந்தோசா
தொகுதிக்கு 600 பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் கடந்த
13ஆம் தேதி அந்த பற்றுச் சீட்டுகளுக்கான பதிவு நடைபெற்ற போது
900க்கும் அதிகமானோர் தொகுதி சேவை மையத்தை முற்றுகையிட்டதாக
அவர் தெரிவித்தார்.

இந்த பற்றுச் சீட்டு விநியோகத் திட்டத்தில் குறைந்த வருமானம் பெறும்
பி40 தரப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை
அளிக்கப்படுகிறது. எனினும், இத்தொகுதியில் பி40 தரப்பினரின்
எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி
செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களை பரிசீலித்து நிர்ணயிக்கப்பட்ட
தகுதிகளைக் கொண்டிருப்பவர்களை இத்திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கும் பணி
தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

செந்தோசா தொகுதிக்குக் கூடுதல் ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளைக்
கோரி மாநில அரசிடம் விண்ணப்பிக்க தாங்கள் எண்ணம் கொண்டுள்ளதாகக்
குணராஜ் முன்னதாகக் கூறியிருந்தார்.

இந்த தொகுதியில் உள்ள குடியிருப்பாளர்களில் பெரும்
எண்ணிக்கையிலானோர் தீபாவளியைக் கொண்டாடுபவர்களாகவும்
அவர்களில் கணிசமானோர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம்
பெறுபவர்களாகவும் இருப்பதை கருத்தில் கொண்டு மாநில அரசிடம் இந்த
கோரிக்கையை தாங்கள் முன்வைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் பண்டார் புக்கிட் திங்கியில் நடைபெற்ற துப்புரவு
இயக்கத்தின் போது நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத்
தெரிவித்திருந்தார்.

செந்தோசா தொகுதியில் உள்ள 90,000 வாக்காளர்களில் சமார் 50
விழுக்காட்டினர் அல்லது 45,000 பேர் இந்தியர்கள் என்பதால்
இத்தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் 600 பற்றுச்சீட்டுகள்
போதுமானவையாக இருக்காது என்றும் அவர் சொன்னார்.

நாட்டில் முக்கியப் பெருநாள் காலங்களின் போது வசதி குறைந்தவர்கள்
தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை
தேர்ந்தெடுக்கப்பட்ட பேரங்காடிகளில் வாங்கிக் கொள்வதற்கு ஏதுவாக 200
வெள்ளி மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.


Pengarang :