NATIONAL

வெ.14 லட்சம் ஷாபு பறிமுதல்- மாணவி உள்பட ஐவர் கைது

கூச்சிங், அக் 16 – இங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட
சோதனை நடவடிக்கையில் 14 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 42.2 கிலோ
ஷாபு வகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதோடு பதினேழு வயது
மாணவி உள்பட ஐவர் கைது செய்யப்பட்டனர்.

பதினேழு முதல் 22 வயது வரையிலான இரு பெண்கள் மற்றும் மூன்று
ஆண்களை உள்ளடக்கிய அந்த ஐவரும் கூச்சிங் மற்றும் பிந்தாவா
பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில்
கைது செய்யப்பட்டதாக சரவா மாநில காவல் துறை ஆணையர் டத்தோ
முகமது அஸ்மான் அகமது சப்ரி கூறினார்.

தீபகற்ப மலேசியாவிலுள்ள தங்கள் நண்பர் மூலம் அந்த போதைப்
பொருளை சீனத் தேயிலை என்ற போர்வையில் அக்கும்பல் கொண்டு
வந்துள்ளதாக இன்று இங்குள்ள மாநில போலீஸ் தலைமையகத்தில்
நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

அந்த போதைப் பொருளை இரு நபர்கள் விமானம் மூலம் இங்கு கொண்டு
வந்துள்ளனர். கூச்சிங், மிரி, பிந்துலு ஆகிய பகுதிகளில் விநியோகிக்கும்
நோக்கில் இந்த போதைப் பொருள் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளது
என்றார் அவர்.

கைதான நபர்களில் ஒருவருக்கு எதிராக அபாயகர போதைப் பொருள்
சட்டத்தின் 39பி பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றப்பதிவு
உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கைதான அனைவரும் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள்
சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் இம்மாதம் 20 ஆம் தேதி வரை
விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும்
சொன்னார்.


Pengarang :