NATIONAL

உயர் வருமானம் கொண்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்- அமிருடின் வலியுறுத்து

ஷா ஆலம், அக் 27- மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு
ஏதுவாக உயரிய வருமானத்தை தரக்கூடிய வேலை வாய்ப்புகள்
உருவாக்கப்பட வேண்டும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி கூறினார்.

இந்த நோக்கத்தை அடைய தொழில்நுட்ப மற்றும் தொழில்திறன் துறைகள்
மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர்
வலியுறுத்தினார்.

வரும் 2030ஆம் ஆண்டுவாக்கில் சராசரி மாத வருமானத்த்தை 4,510
வெள்ளியாக உயர்த்த வேண்டும் என்ற 2030 புதிய தொழில்துறை
பெருந்திட்டத்தின் (என்.ஐ.எம்.பி.) இலக்கை அடைய இந்த முன்னெடுப்புகள்
அவசியமாவதாக அவர் சொன்னார்.

தற்போது 11.5 விழுக்காட்டு குடும்பங்கள் மட்டுமே 16,000 வெள்ளிக்கும்
அதிகமாக வருமானம் பெறுவதை மலேசிய புள்ளிவிபரத் துறையின்
2022ஆம் ஆண்டு வருமானக் கணக்கெடுப்பு காட்டுகிறது என்று அவர்
தெரிவித்தார்.சுமார் 89.5 விழுக்காட்டு குடும்பங்கள் இந்த விழுக்காட்டிக்கும் கீழ்
வருமானம் பெறுவதை இந்த தரவுகள் காட்டுகின்றன.

இந்த எண்ணிக்கையில் சுமார் 40 விழுக்காட்டினர் மாதம் 5,000 வெள்ளிக்கும்
குறைவாக வருமானம் ஈட்டுகின்றனர் என்று அவர் சொன்னார்.

பொருளாதார ரீதியாக ஒதுக்கப்படுகிறோம் என்ற எண்ணம் மற்றும்
தரமான வாழ்க்கை வாழ்வதற்குரிய வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படாதது
ஆகியவை மலேசியர்கள் மத்தியில் காணப்படும் அச்ச உணர்வுக்கான
காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

மக்களவையில் நேற்று 2024ஆம் ஆண்டிற்கான விநியோக மசோதா மீதான
விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய போது கோம்பாக் நாடாளுமன்ற
உறுப்பினருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :