NATIONAL

செம்பனைத் தொழில் துறையில்  திடீர் லாப வரி அகற்றப்படாது

கோலாலம்பூர், அக் 27 – செம்பனைத் தொழில்துறையின் மீதான திடீர் லாப வரியை  ரத்து செய்ய அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும், தொழில்துறையின் வாழ்வாதரம் மற்றும் செம்பனை உற்பத்தி செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அதன் விகிதம் மற்றும் லாப வரம்பு அளவு உட்பட  வரி விதிப்பு முறைகளை ஆய்வு செய்ய அரசாங்கம் எப்போதும் தயாராக உள்ளதாக அது குறிப்பிட்டது.

செம்பனைத்  தொழில் துறையில் கடந்த 1999 முதல் தற்போது வரை திடீர் லாப வரி விதிப்பில் அதே கணக்கீட்டு முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், வரி விகிதம் மற்றும் வரம்பு மதிப்பு மட்டும் பல முறை திருத்தப்பட்டது.

செம்பனை பழங்கள் மீது திடீர் லாப வரி விதிக்கும் நோக்கத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட லாப வரம்பு மதிப்பு வரி முறையில் பல தடவை திருத்தம் செய்யப்பட்டது.

அசல் லாப வரம்பு மதிப்பு  2,000  வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த வேளையில் அதன் சமீபத்திய வரம்பு மதிப்பு தீபகற்ப மலேசியாவில் 3,000 வெள்ளியாகவும் சபா மற்றும் சரவாக்கில்  3,500 வெள்ளியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சு கூறியது.

மக்களவையில் நேற்று திடீர் லாப வரியை அகற்றுவதற்கான அரசாங்க்தின் திட்டம் குறித்து  புருவாஸ் உறுப்பினர் டத்தோ ஙே கூ ஹாமின் கேள்விக்கு  அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் அமைச்சு  இதனைக் குறிப்பிட்டது.


Pengarang :