SELANGOR

தீபாவளி பற்றுச் சீட்டுக்குப் புக்கிட் மெலாவத்தி தொகுதியில் 679 விண்ணப்பங்கள்

ஷா ஆலம், அக் 27- அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி
பண்டிகையை முன்னிட்டு வசதி குறைந்தவர்களுக்கு மாநில அரசு
வழங்கும் ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளைப் பெற புக்கிட் மெலாவத்தி
மக்களிடமிந்து 679 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இம்மாதம் 19 முதல் 22ஆம் தேதி வரை வரை கோல சிலாங்கூர்
நாடாளுமன்ற உறுப்பினரின் சேவை மையத்தில் திறக்கப்பட்ட சிறப்பு
முகப்பிடத்தின் வாயிலாக இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக கோல
சிலாங்கூர் தொகுதி கெஅடிலான் தலைவர் தீபன் சுப்பிரமணியம் கூறினார்.

இவ்வாண்டு தீபாவளிக்காகப் புக்கிட் மெலாவத்தி தொகுதிக்கு மாநில அரசு
200 வெள்ளி மதிப்பிலான 400 ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை
ஒதுக்கியுள்ள நிலையில் பொது மக்களிடமிருந்து 679 விண்ணப்பங்களை
தாம் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

இந்த விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் பணியை மேற்கொண்ட போது
பிங்காஸ் எனப்படும் நல்வாழ்வு உதவித் திட்டம் மற்றும் எஸ்.எம்.யு.இ.
எனப்படும் மூத்த குடிமக்கள் பரிவு உதவித் திட்டத்தில் இடம் பெற்றுள்ள
32 பேரின் விண்ணப்பங்களை தாங்கள் நிராகரிக்க நேர்ந்ததாக அவர்
குறிப்பிட்டார்.

இந்த பெருநாள் கால ஷோம் ஷோப்பிங் திட்டத்திற்கு விண்ணப்பம்
செய்வோர் மாநில அரசின் இதர உதவித் திட்டங்கள் வழி
பயன்பெறுவர்களாக இருக்கக்கூடாது என்பது நிபந்தனையாகும் என்றும்
அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த தீபாவளி பற்றுச் சீட்டு விநியோகத்தில் பாகுபாடு காட்டப்படுவதாக
கடந்த காலங்களில் பொது மக்களிடமிருந்து வந்த புகார்களைக் கருத்தில்
கொண்டு இம்முறை விண்ணப்ப முறையில் வெளிப்படைப் போக்கை
கடைபிடிக்கிறோம். அதன் அடிப்படையில் தகுதி உள்ள அனைவரும் நேரில் வந்து விண்ணப்பங்களை நேரில் வந்து சமர்ப்பிக்கலாம் எனக்
கூறியிருந்தோம்.

இந்த திட்டத்தின் மூலம் உண்மையில் வறிய நிலையிலுள்ளவர்கள்
பயன்பெற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, முதன்
முறையாக இந்த தடவை விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில்
சென்று நிலைமையைக் கண்டறிந்து தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே
பற்றுச் சீட்டுகள் கிடைப்பதை உறுதி செய்யவிருக்கிறோம் என்றார் அவர்.


Pengarang :