புதிய பேரரசர் நியமனம் தொடர்பான ஆட்சியாளர்களின் முடிவு இன்று மாலை அறிவிக்கப்படும்

கோலாலம்பூர், அக் 27- நாட்டின் 17வது பேரரசர் மற்றும் துணைப்
பேரரசரை நியமனம் செய்வது குறித்து விவாதிப்பதற்காக இன்று இங்குள்ள
இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற 263வது (சிறப்பு) ஆட்சியாளர்கள்
கூட்டத்திற்கு திரங்கானு சுல்தான் சுல்தான் மிஸான் ஜைனால் அபிடின்
தலைமை தாங்கினார்.

காலை 10.10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் கிளந்தான், பெர்லிஸ்
ஆட்சியாளர்கள் தவிர்த்து மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான்
அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா உள்பட அனைத்து
ஆட்சியாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஜோகூர் சுல்தான் இப்ராஹிம்
அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தார் சிலாங்கூர் சுல்தான் ஷராபிடின்
இட்ரிஸ் ஷா, பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா ஆகியோர், நெகிரி
செம்பிலான் யாங் டி பெர்த்துவான் துவாங்கு முஹ்ரிஸ் இப்னி
அல்மார்ஜூம் துவாங்கு முனாவிர், கெடா சுல்தான் சாலேவுடின் சுல்தான்
பட்லிஷா ஆகியோரும் அடங்குவர்.

இந்த சிறப்புக் கூட்டம் ஒரு மணி நேரத்திற்கு நடைபெற்றது. புதிய
மாமன்னர் தேர்வு தொடர்பான அறிவிப்பை அரச முத்திரைக் காப்பாளர்
இன்று மாலை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பில் 16வது மாமன்னராக இருக்கும் பகாங் சுல்தான் அல்-சுல்தான்
அப்துல்லாவின் ஐந்தாண்டு பதவி காலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம்
30ஆம் தேதியுடன் முடிவடைகிறது.


Pengarang :