SELANGOR

பந்திங், சுங்கை சீடு தோட்டத்தில் குடிநீர் விநியோகம் துண்டிப்பு- பாப்பாராய்டு உடனடி நடவடிக்கை

பந்திங், அக் 27- இங்குள்ள சுங்கை சீடு தோட்டத்தில் கடந்த மூன்று
தினங்களாகக் குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் அத்தோட்ட மக்கள்
பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேம்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அந்த தோட்டத்தில் இன்னும்
குடியிருக்கும் 27 குடும்பத்தினருக்கான குடிநீர் கட்டணத்தைச்
செலுத்துவதை சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனம் நிறுத்தியதைத்
தொடர்ந்து மூன்று தினங்களுக்கு முன்னர் அங்கு குடிநீர் விநியோகம்
துண்டிக்கப்பட்டதாக கோல லங்காட் தொகுதி ஒருங்கிணைப்பாளர்
ஹரிதாஸ் ராமசாமி கூறினார்.

அந்த குடியிருப்புகளுக்கான குடிநீர் கட்டண பாக்கி 22,000 வெள்ளியாக
உயர்ந்து விட்ட நிலையில் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் நீர்
விநியோகத்தை துண்டித்து விட்டது. இவ்விவகாரம் மாநில ஆட்சிக்குழு
உறுப்பினரும் பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான வீ.பாப்பாராய்டுவின்
கவனத்திற்குச் கொண்டுச் செல்லப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட தோட்டத்திற்கு நேற்று வருகை புரிந்த பாப்பாராய்டு, தோட்ட
மக்களைச் சந்தித்து விபரங்களைக் கேட்டறிந்ததோடு கணிசமானத்
தொகையை ஆயர் சிலாங்கூர் நிறுவனத்திற்குச் செலுத்தி நீர் விநியோகம்
மீண்டும் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார் என ஹரிதாஸ் சொன்னார்.

சைம் டார்பி நிறுவனத்திற்கு சொந்தமான இந்த தோட்டத்தை மேம்பாட்டு
நிறுவனம் கொள்முதல் செய்ததைத் தொடர்ந்து தோட்ட மக்களுக்கு
வீடுகள் கட்டித் தரப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டது. இன்னும் வீடுகள்
கட்டப்படாத நிலையில் சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்கள்
அத்தோட்டத்திலேயே வசித்து வருகின்றன. அவர்களுக்கான குடிநீர்
கட்டணத்தைச் சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனம் இதுநாள் வரை
செலுத்தி வந்தது.


Pengarang :