NATIONAL

இன்றைய மக்களவைக் கூட்டத்தில் ஆர்.எஃப்.ஐ.டி., மைடிஜிட்டல் உள்ளிட்ட விவகாரங்களுக்கு முன்னுரிமை

கோலாலம்பூர், நவ 6- இன்று ஐந்தாவது வாரத்தைத் தொடும் மக்களவைக்
கூட்டத் தொடரில் நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில்
அமல்படுத்தப்பட்டுள்ள வானொலி அதிர்வெண் (ஆர்.எஃப்.ஐ.டி.) அடையாள
முறை மீதான அரசாங்கத்தின் இலக்கு உள்ளிட்ட விவகாரங்கள்
விவாதிக்கப்படும்.

நெடுஞ்சாலைகளில் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்கு ஏதுவாக
டோல் கட்டண வசூலிப்பு முறையை தரம் உயர்த்துவதற்கு அரசாங்கம்
மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து பொதுப்பணித் துறை
அமைச்சரிடம் அலோர்ஸ்டார் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல்
உறுப்பினர் அஃப்னான் ஹமிமி தாயிப் அசாமுடின் கேள்வியெழுப்புவார்.

மலேசியாவிலுள்ள திறன் பெற்ற மனிதவளங்கள் உயர் வருமானம்
கொண்ட பிற நாடுகளுக்கு செல்வதில் தடையாக இருக்கக்கூடிய
இணையான திறன் இல்லாப் பிரச்சனைக்குத் தீர்வு காண எடுக்கப்பட்ட
நடவடிக்கைகள் குறித்து மனித வள அமைச்சரிடம் பண்டார் துன் ரசாக்
உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் வினா
தொடுப்பார்.

மலேசிய இலக்கவியல் பொருளாதார நடவடிக்கை செயல்வடிவ
(மைடிஜிட்டல்) அமலாக்கத்தின் நிலை குறித்து இண்ட்ரா மக்கோத்தா
தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோஸ்ரீ சைபுடின்
அப்துல்லா பொருளாதார அமைச்சரிடம் விளக்கம் கோருவார்.

2024ஆம் ஆண்டிற்கான விநியோகச் சட்ட மசோதா மக்களவையில் கடந்த
வியாழக்கிழமை குரல் வாக்கெடுப்பின் வழி நிறைவேற்றப்பட்டதைத்
தொடர்ந்து இன்று செயல்குழு நிலையிலான விவாதங்கள் தொடர்ந்து
நடைபெறும்.

இந்த செயல்குழு நிலையிலான விவாதங்கள் இம்மாதம் 27ஆம் தேதி
வரை 12 நாட்களுக்கு நடைபெறும்.


Pengarang :