NATIONAL

சட்டவிரோதத் தொழிற்சாலைகளை முதலாளிகள் பதிவு செய்வதை ஊக்குவிக்க புதியக் கொள்கை

ஷா ஆலம், நவ. 7- மாநிலத்தில் சட்ட விரோதமாகத் தொழிற்சாலை நடத்துபவர்கள் தங்கள் வர்த்தக வளாகங்களை சட்டப்பூர்வமாகப் பதிவு செய்ய அடுத்த ஆண்டு புதிய கொள்கை வகுக்கப்படும்.

முந்தைய வர்த்தக பதிவு நடவடிக்கை முடிவடைந்து, இந்த ஆண்டு இறுதி வரை தற்காலிக உரிமங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  ஊராட்சி மன்றம் மற்றும் சுற்றுலாத் துறைக்கான  ஆட்சிக்குழு உறுப்பினர் இங் சுயி லிம் கூறினார்.

அங்கீகரிக்கப்படாத தொழிற்சாலைகளுக்கு “ஊக்கத்தை” அளிக்க  விரும்புகிறேன்.ஆனால் அதற்கு சிறிது நேரம் ஆகலாம்.  தொழில்முனைவோர் தங்கள் தொழிற்சாலைகளை பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் மக்கள் நட்பு அல்லது ஆற்றல்மிக்க ‘பணிக்குழு’ ஒன்றை உருவாக்கலாம் என்று அவர் சொன்னார்.

இங்குள்ள எம்.பி.எஸ்.ஏ. மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஷா ஆலம் மாநகர் மன்றத்திற்கும் உரிமம் பெறாத தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுவதைத் தவிர்க்க, தொழிற்சாலை உரிமையாளர்கள்  தங்கள் வணிகங்களைப் பதிவு செய்ய தீவிரமாக முயற்சிக்குமாறு இங்  நினைவுபடுத்தினார்.

அங்கீகரிக்கப்படாத தொழிற்சாலைகளின் பிரச்சினையைத் தீர்ப்பதில் மாநில அரசின் கடின உழைப்பை அபகரிக்க வேண்டாம் என்று அங்கீகரிக்கப்படாத தொழிற்சாலைகளை நடத்துபவர்கள் அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன்.

அவசியம் ஏற்படும் பட்சத்தில் 1965ஆம் ஆண்டு தேசிய நிலச்சட்டத்தின் பிரிவு 129 (5) (பி) இன் கீழ் வர்த்தக வளாகங்களை இடித்து நிலத்தைப் பறிமுதல் செய்வது   உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் கீழ்ப்படியாத மற்றும் தன்மூப்பான தொழிற்சாலைகளுக்கு எதிராக எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

கடந்த  2006 முதல் சிலாங்கூர் முழுவதும் மொத்தம் 7,221 தொழிற்சாலைகள் அனுமதியின்றி இயங்கி வருவதாகக் கூறிய அவர் , இதுவரை ஏழு விழுக்காட்டு தொழிற்சாலைகள் மட்டுமே வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.


Pengarang :