NATIONAL

ஹமாஸ் ஆதரவு தரப்பினருக்கு எதிராக தடை விதிக்கும் அமெரிக்காவின் மசோதா மீது மக்களவையில் இன்று விவாதம்

கோலாலம்பூர், நவ 7- ஹமாஸ் அனைத்துலக நிதி எதிர்ப்பு சட்ட
மசோதாவை நிறைவேற்றிய அமெரிக்க பிரதிநிதித்துவ சபையின்
நடவடிக்கை மீதான மலேசியாவின் நிலைப்பாடு குறித்து பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மக்களவையில் விளக்கமளிப்பார்.

இன்றைய அமைச்சர் கேள்வி அங்கத்தின் போது இதன் தொடர்பான
கேள்வியை மாச்சாங் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் வான்
அகமது பைசால் வான் அகமது கமால் முன்வைப்பார் என்று
நாடாளுமன்ற அகப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இன்றைய கூட்ட
நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன ஜிஹாட் இயக்கத்திற்கு ஆதரவளிக்கும்
வெளி தரப்பினருக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா குறித்து அவர்
கேள்வியெழுப்பவுள்ளார்.

அரசாங்கத்தின் அடைநிலையை அனைத்து விதமான ஊடகங்கள்
வாயிலாக விளம்பரப்படுத்துவதற்கு கடந்த 2020 முதல் அரசாங்கம்
செலவிட்ட தொகை குறித்து பத்து தொகுதி பக்கத்தான் ஹராப்பான்
உறுப்பினர் பி.பிரபாகரன் பிரதமரிடம் வினவுவார்.

கிழக்கு சபா பாதுகாப்பு ஆணையத்தின் (எஸ்கோம்) நடப்பு நிலை மற்றும்
எல்லை பாதுகாப்பில் அமலாக்கத் துறையின் ஆற்றலை அதிகரிப்பதற்கான
நடவடிக்கை குறித்து பெலுரான் பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர்
டத்தோஸ்ரீ டாக்டர் ரோனால்ட் கிண்டே கேள்வியை முன்வைப்பார்.

மூன்று ஆர் விவகாரங்களை கையாள்வதற்கு நிந்தனைச் சட்டம் மற்றும்
தொடர்புச் சட்டம் போதுமானதா அல்லது இன நல்லிணக்கத்தைப்
பேணுவதற்கு புதிய சட்டங்களை அமல்படுத்தும் திட்டம் அரசாங்கத்திற்கு
உள்ளதா என்று ஸ்ரீகாடிங் பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர்
அமினுள்ஹூடா ஹசான் கேள்வியெழுப்புவார்.


Pengarang :