NATIONAL

நதிகளில் குப்பைகளை வீசும் தனிநபர்கள் அல்லது தரப்புகள் மீது கடும் நடவடிக்கை

கோலாலம்பூர், நவ.7 – நதிகளில் குப்பைகளை வீசும் தனிநபர்கள் அல்லது தரப்புகள் மீது அதிக அபராதம் விதிக்க அரசு பரிசீலித்து வருவதாக இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமட் தெரிவித்தார்.

வெள்ளம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தும் கடுமையான குற்றங்களைச் செய்யக்கூடாது என்பதற்காகப் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த இந்த நடவடிக்கை பரிசீலிக்கப்படுகிறது என்றார்.

“பெருந்தொகை செலவழித்து நதிகளை (உள்கட்டமைப்பை) மேம்படுத்தலாம், ஆனால் குப்பை பிரச்சனையைச் (குப்பைகளை நதிகளில் வீசுவது) சமாளிக்க முடியாமல் போனால் இந்த சிக்கலைத் தீர்க்க முடியாது.

“தண்டனைகளை அதிகரிப்பது குறித்து நாங்கள் விவாதிப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. சிறை தண்டனை அல்லது அபராதம் என பல சட்டங்களை நாங்கள் திருத்திக் கொண்டிருக்கிறோம்,” என்று செலாயாங் மொத்த விற்பனை சந்தைக்கு அருகில் உள்ள சுங்கை ஜின்ஜாங்கைச் சுற்றியுள்ள பகுதியில் கழிவு மேலாண்மை கணக்கெடுப்பை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் பிரதி உள்ளூராட்சி அபிவிருத்தி அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா மொஹமட் நசீரும் கலந்து கொண்டார்.

இதற்கிடையில், சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள ஆறுகளில் குப்பை மேலாண்மைக்காக இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை மொத்தம் 8.2 மில்லியன் ரிங்கிட் செலவிடப் பட்டதாக நிக் நஸ்மி கூறினார்.

இந்தத் தொகையைப் பற்றி அவர் கூறுகையில், சுங்கை ஜின்ஜாங் வெள்ள நீர்த்தேக்கத்தில் ஒரு லோக் பூம் அமைப்பிற்காக RM166,320 மற்றும் சுங்கை ஊடாங் துணை நதியில் குப்பை பராமரிப்புக்காக ஆண்டுக்கு RM150,000 செலவிடப்பட்டது.

– பெர்னாமா


Pengarang :