NATIONAL

மக்கள் வருமான முன்னெடுப்புத் திட்டத்திற்கு 130,101 விண்ணப்பங்கள்- பொருளாதார அமைச்சு தகவல்

கோலாலம்பூர், நவ 10 – இவ்வாண்டு  நவம்பர் 2ஆம் தேதி வரை மக்கள் வருமான முன்னெடுப்புக்கு (ஐ.பி.ஆர்.) மொத்தம் 130,101 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

விண்ணப்பம் செய்தவர்களில்  குறைந்த வருமானம் பெறும் பிரிவைச் சேர்ந்த 48,606 பேர் மூன்று முன்னெடுப்புகளுடன் பொருந்தத் தகுதியைப் பெற்றுள்ளனர் என்று அமைச்சு தெரிவித்தது.

உணவு தொழில்முனைவோர் முன்னெடுப்புக்கு (இன்சான்) 20,901 விண்ணப்பங்களும் விவசாய தொழில்முனைவோர் முன்னெடுப்புக்கு (இந்தான்) 13,174 விண்ணப்பங்களும் சேவை நடத்துநர்  (இக்சான்) முன்னெடுப்புக்கு 14,531 விண்ணப்பங்களும் பெறப்பட்டன என்று நாடாளுமன்றத்தின் இணையதளத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அமைச்சு குறிப்பிட்டது.

இன்சான் திட்டத்தின் கீழ்  மொத்தம் 97 பங்கேற்பாளர்கள் பயனடைந்துள்ளனர். மேலும் சில பங்கேற்பாளர்கள் மாதத்திற்கு 14,000 வெள்ளி வரை சராசரி விற்பனை வருமானத்தை அடைய முடிந்தது என அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்தான் வாயிலாக  16 இடங்களில் 331.03 ஹெக்டர் பரப்பளவில் மொத்த 92.6 மில்லியன் வெள்ளி செலவிலான திட்டங்களை மேற்கொள்ள 1,020 பங்கேற்பாளர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இக்சான் திட்டத்தைப் பொறுத்த வரை  பொறுத்தவரை மொத்தம் 1,032 பங்கேற்பாளர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான மொத்த செலவு 14.2 மில்லியன் வெள்ளியாகும் என்று மக்களவையில் தஞ்சோங் மானிஸ் தொகுதி ஜி.பி.எஸ். உறுப்பினர் யூசுப் அப்துல் வஹாப் எழுப்பிய கேள்விக்கு அமைச்சு பதிலளித்தது.


Pengarang :