NATIONAL

தனித்து வாழும் தாய்க்கு ஏற்பட்ட பரிதாபம்- இணையக் காதல் மோசடியில் வெ.170,000 இழந்தார்

குவாந்தான், நவ 20 – சமூக ஊடகம் வழி அறிமுகமான நபரின் இணையக் காதல் மோசடியில் சிக்கி தனித்து வாழும் தாய் ஒருவர் தனது சேமிப்புத் தொகையான 170,000 வெள்ளியை இழந்தார்.

நாற்பது வயதான அந்த அரசு ஊழியருக்கு இண்ட்ஸ்டாகிராம் வாயிலாக ஆடவர் ஒருவருடன் கடந்த மாதம் அறிமுகம் ஏற்பட்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யாஹ்யா ஓத்மான் கூறினார்.

பின்னர் வாட்ஸ்ஆப் எனும் புலனம் வாயிலாக தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட அந்த ஆடவர் அந்த மாதுவை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்ததாக அவர் சொன்னார்.

சில வாரங்களுக்குப் பின்னர் மருத்துவமனை பில் கட்டுவதற்காக 1,500 வெள்ளியை அம்மாதுவிடமிருந்து கடனாகப் பெற்ற அந்த ஆடவர் அத்தொகையை திரும்பச் செலுத்தி விடுவதாக வாக்குறுதியளித்துள்ளார்.

அதன் பின்னர் பல்வேறு காரணங்களைக் கூறி அந்த மாதுவிடமிருந்து அவ்வாடவர் தொடந்து பணம் பெற்று வந்துள்ளார். மொத்தம் ஒன்பது பரிவர்த்தனைகள் மூலம் 170,400 வெள்ளியை அம்மாது அவ்வாடவர் கணக்கில் சேர்த்துள்ளார் என டத்தோஸ்ரீ யாஹ்யா அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த மாது பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நேற்று புகார் செய்ததாகக் கூறிய அவர், இப்புகார் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

சமூக ஊடகங்கள் வாயிலாக அறிமுகமாகும் நபர்களை எளிதில் நம்பிவிட வேண்டாம் என்று பொது மக்களை யாஹ்யா கேட்டுக் கொண்டார்.


Pengarang :