NATIONAL

திரங்கானுவில் வெள்ளப் பாதிப்பு அதிகரிப்பு- பேராக்கில் நிலைமையில் மாற்றமில்லை

கோலாலம்பூர், நவ 21- நேற்றிரவு நிலவரப்படி திரங்கானு மாநிலத்தில்
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து
வரும் நிலையில் பேராக்கில் எந்த மாற்றமும் இல்லை.

திரங்கானு மாநிலத்தில் நேற்று மாலை 6.00 மணிக்கு 893ஆக இருந்த
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரவு 8.00 மணிக்கு
1,070ஆக உயர்வு கண்டது.

கோல நெருஸ் மாவட்டத்தில் மிக அதிகமாக அதாவது 166
குடும்பங்களைச் சேர்ந்த 564 பேர் ஏழு துயர் துடைப்பு மையங்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை செயல்குழு செயலகம்
கூறியது.

கோல திரங்கானு மாவட்டத்தில் 152 குடும்பங்களைச் சேர்ந்த 496 பேர்
மூன்று நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர். செத்தியுவில்
உள்ள ஒரு நிவாரண மையத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த பத்து
பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, திரங்கானு மாநிலத்திலுள்ள ஆறுகளில் நீர் மட்டம்
வழக்கமான அளவில் காணப்படுவதாக வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை
கூறியது.

பேராக் மாநிலத்தில் வெள்ள நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை.
கிரியான் மாவட்டத்தில் உள்ள இரு துயர் துடைப்பு மையங்களில் 22
குடும்பங்களைச் சேர்ந்த 75 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சங்காட் லோபாக் தேசிய பள்ளியில் செயல்படும் நிவாரண மையத்தில்
மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் தங்கியுள்ள வேளையில் ஆலோர்
பொங்சு தேசிய பள்ளியில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேர்
அடைக்கலம் நாடியுள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த மாதம் முதல்
இந்த துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.


Pengarang :