NATIONAL

பேரிடர் மீட்பு நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது- நட்மா கூறுகிறது

கோலாலம்பூர், நவ 23- பேரிடர் காலத்தை எதிர்கொள்வதில் தேசிய பேரிடர்
மேலாண்மை நிறுவனத்திற்கும் (நட்மா) இதர மீட்பு நிறுவனங்களுக்கும்
இடையிலான ஒருங்கிணைப்பு சீராகவும் சிறப்பாகவும் உள்ளதாக அதன்
தலைமை இயக்குநர் டத்தோ கைரில் ஷாஹரில் இட்ருஸ் கூறினார்.

வடகிழக்கு பருவமழை வருவதற்கு முன்னரே தேவையான
முன்னேற்பாடுகள் செய்யப்படு விட்டதாக கூறிய அவர், மீட்பு
நடவடிக்கைகளுக்கான சீரான செயலாக்க நடைமுறையும் (எஸ்.ஒ.பி.)தரம்
உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

தேசிய பாதுகாப்பு மன்றத்தின் உத்தரவு எண். 20க்க்கு ஏற்ப அனைத்து மீட்பு
நிறுவனங்களை உள்ளடக்கிய பல்வேறு செயல்முறைப் பயிற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு விட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

முந்தைய பேரிடர்களின் போது நாம் நிறைய அனுபவங்களைக் கற்றுக்
கொண்டுள்ளதால் இனி வரும் காலங்களில் மீட்பு நிறுவனங்களை
ஒருங்கிணைக்கும் பணி சிரமமானதாக இருக்காது என்று அவர் சொன்னார்.

பெர்னாமா டிவியில் நேற்றிரவு ஒளிபரப்பான “வெள்ளம்-மீட்பு உதவி, மீட்பு
நிறுவனங்களின் ஒத்துழைப்பு“ எனும் தலைப்பிலான விவாத நிகழ்வில்
கலந்து கொண்ட போது அவர் இதனைக் கூறினார்.

மீட்பு பணிகளின் போது கடைபிடிக்க வேண்டிய எஸ்.ஒ.பி. விதிமுறைகள்
குறித்து சம்பந்தப்பட்டத் துறைகளின் தலைவர்கள் கருத்து பரிமாற்றம்
செய்து கொள்வதற்கும் இந்த ஒருங்கிணைப்பு துணை புரியும் என்றார்
அவர்.

ஓரிடத்தில் பேரிடர் நிகழும் பட்சத்தில் உதவிக் குழுக்கள் வரும் வரை
காத்திராமல் விரைந்து நடவடிக்கை எடுக்கக்கூடிய முதல் தரப்பினராக
அவ்வட்டார மக்கள் இருக்க வேண்டும் எனத் தாம் விரும்புவதாகவும்
அவர் குறிப்பிட்டார்.

ஏனென்றால், பேரிடர் பகுதி (வெள்ளம் ஏற்பட்ட பகுதி) குறித்து வட்டார
மக்கள் நன்கு அறிந்திருப்பர் என்பதோடு விரைந்து வெளியேறக்கூடிய
பாதுகாப்பான இடமும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும் என்றார்.


Pengarang :