கோலாலம்பூர், டிச.1: யமஹா ஈகோ ரக மோட்டார் சைக்கிள் மீது ஹோண்டா சிவிக் ரக கார் மோதிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அக்கார் ஓட்டுநர் தனது மனைவியுடன் கொண்ட வாக்குவாதத்தின் காரணமாக ஏற்பட்டதாக  நம்பப்படுகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தப்பி ஓடிய நபரை நேற்றிரவு 7.45 மணியளவில் ஜாலான் பிடாரா, செலாயாங்கில் வெற்றிகரமாகக் கைது செய்ததாக கோம்பாக் மாவட்ட காவல் துறையின் பொறுப்பாளர் நூர் அரிஃபின் முகமட் தெரிவித்தார்.

“18 வினாடிகள் கொண்ட வீடியோவில் பதிவான அச்சம்பவம் நவம்பர் 29 பிற்பகல் 3.30 மணியளவில் ஜாலான் துன் தேஜா 3, தாமான் துன் தேஜா, ரவாங் என்ற இடத்தில் நடந்ததாக நம்பப்படுகிறது என விசாரணையின் முடிவுகள் கண்டறிந்துள்ளன. கார் ஓட்டுநர். வாக்குவாதத்திற்கு பிறகு மனைவியிடம் இருந்து தப்பிக்க முயற்சித்த போது இச்சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.

காரோட்டி காரை அங்கிருந்து கிளப்பி வெளியேறும் போது தனது பாதையை மறைத்த மோட்டார் சைக்கிளை மோதியதாகவும், அதனால்  மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கு சிறு காயம் ஏற்பட்டதாகவும் அறியப்படுகிறது.

குற்றவியல் சட்டப்பிரிவு 307 மற்றும் பிரிவு 337 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இச்சம்பவம் குறித்த தகவல்களுக்குப் பொதுமக்கள் விசாரணை அதிகாரி ஏஎஸ்பி ஐ.அகிலனை 019-5230 801 அல்லது கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமையக செயல்பாட்டு அறையை 03-6126 2222 தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

– பெர்னாமா