SELANGOR

சுற்றுச்சூழல் துறைக்குக் கூடுதலாக 3,000 பணியாளர்கள் தேவை

புத்ராஜெயா, டிச 1: சுற்றுச்சூழல் துறையில் தற்போது 1,100 அமலாக்கப் பணியாளர்கள் உள்ள நிலையில் கூடுதலாக 3,000 பணியாளர்கள் தேவை. வேலைப்பளு மற்றும் நாட்டில் நிகழும் மாசு வழக்குகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, அதன் இயக்குநர் ஜெனரல் டத்தோ வான் அப்துல் லத்தீஃப் வான் ஜாஃபர் இவ்வாறு கூறினார்.

காற்று மற்றும் நீர் மாசுக் கட்டுப்பாடு, நச்சுக் கழிவு மேலாண்மை, நதி மற்றும் கடல் நீரின் தரம் போன்றவற்றை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் துறையின் பணிகள் பரந்து இருப்பதால், அதிக கண்காணிப்பு மற்றும் அமலாக்கப் பணியாளர்கள் தேவைப்படுவதாக ஊடகவியலாளர்களுடனான அமர்வில் அவர் கூறினார்.

கண்காணிப்பு மற்றும் அமலாக்கப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காகக் கூடுதல் அமலாக்க அதிகாரிகளுக்கு, இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்திடம் சுற்றுச்சூழல் துறை விண்ணப்பம் அளித்துள்ளது என்றார்.

காற்று மற்றும் நீரை மாசுபடுத்தும் திறன் கொண்ட கிட்டத்தட்ட 60,000 தொழிற்சாலைகள் மற்றும் பட்டறைகளை தொடர்ந்து கண்காணிக்க, உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு சுற்றுச்சூழல் துறைக்கு உதவும். ஏனெனில், தொழில்துறையினர் மத்தியில் விழிப்புணர்வு நிலை இன்னும் திருப்திகரமான நிலையை எட்டவில்லை, என்றார்.

மலேசியாவில் உள்ள 672 ஆறுகளில் 29 அல்லது நான்கு சதவீத ஆறுகள் மாசுபட்டுள்ளன. நதி மாசுபாட்டின் முக்கிய ஆதாரங்கள் கால்நடை பண்ணைகள், தொழிற்சாலைகள், கழிவு நீர் ஆலைகள், மீன்பிடி குடியிருப்புகள் மற்றும் குடிசைபகுதிகள் ஆகியவை ஆகும் என வான் அப்துல் லத்தீஃப் கூறினார்.

தற்போதைய 30 நிலையங்களுடன் ஒப்பிடுகையில், நதி நீரின் தரத்தை கண்காணிப்பதற்கான தானியங்கி நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியில் சுற்றுச்சூழல் துறை ஈடுப் பட்டுள்ளது என்று வான் அப்துல் லத்தீஃப் கூறினார்.

“நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம், மேலும், மாநில அரசுடன் விவாதித்து வருகிறோம். இந்த தானியங்கி நிலையத்தை நிறுவுவதில் எங்களுடன் இணைந்து நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஆபரேட்டர்கள் இருக்கக்கூடும்” என்று அவர் கூறினார்.

இந்த நிலையம் ஆற்று நீரின் தரத்தை கண்காணிக்கவும், நதி நீர் மாசுபடும் சம்பவம் நடந்தால் முன்கூட்டியே எச்சரிக்கவும் உதவும்.

 

– பெர்னாமா


Pengarang :