NATIONAL

புதிய மதுபான லைசென்ஸ்  தடை நீக்கப்படவில்லை- டி.பி.கே.எல் விளக்கம்

கோலாலம்பூர், டிச. 5 – கோலாலம்பூர் மாநகரில் உள்ள மளிகைக் கடைகள், பல்பொருள் விற்பனைக் கடைகள் மற்றும் சீன மருந்துக் கூடங்களில் மதுபான விற்பனைக்கு புதிய உரிமங்கள் வழங்குவதற்கு விதிக்கப்பட்ட  முடக்கம் இன்னும் நீக்கப்படவில்லை என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டிபிகேஎல்) தெரிவித்துள்ளது.

கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச  கலால் வரி வாரியம் அதன் தற்போதைய செயல்பாடுகளை கவனித்து வருவதோடு உரிமம் புதுப்பித்தல் விண்ணப்பங்களை மட்டுமே அது  பரிசீலித்து வருகிறது.

மளிகைக் கடைகள்,  பல்பொருள் விற்பனைக் கடைகள் மற்றும் சீன மருந்துக் கூடங்களில் மதுபான விற்பனைக்கானத்  தடை கடந்த நவம்பர் 23ஆம் தேதி கூடிய கூட்டத்தில் திரும்பப் பெறப்பட்டதாக கூறப்படுவதில்  உண்மையில்லை என அது கூறியது.

இது போன்ற வளாகங்களில் மதுபான விற்பனைக்கான விண்ணப்பங்களை பரிசீலிப்பது  நிர்ணயிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டது மாநகர் மன்றம் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 23ஆம் தேதி  கூடிய குழு, மொத்தம் 1,519 உரிமம் புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளித்தது எனவும் ஆது தெளிவுபடுத்தியது.

கோலாலம்பூர் கூட்டசு பிரதேச கலால் வாரியத்தின் புதிய உறுப்பினர்கள்  பலசரக்குக் கடைகள்,  பல்பொருள் விற்பனைக் கடைகள் மற்றும் சீன மருந்துக் கூடங்களில் மதுபானம் விற்பனை செய்வதற்கான தடையை நீக்கியதாக சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவலாகச் செய்தி வெளியானது.


Pengarang :