NATIONAL

ரிங்கிட் 100 இ-மடாணி கிரெடிட்டை ரொக்கமாக வழங்கும் மோசடியாளர்களிடம் ஏமாற வேண்டாம்

கோலாலம்பூர், டிச 5 – ரிங்கிட் 100 இ-மடாணி கிரெடிட்டை ரொக்கமாக வழங்கும் மோசடியாளர்களிடம்  ஏமாற வேண்டாம் என்று தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு முறையும்  அரசாங்கம்  மக்களுக்கு ஏதாவது  ஒரு உதவியை வழங்க  அறிவிக்கும்போது நேர்மையற்ற தரப்புகளின் இத்தகைய நடவடிக்கைகள்  அதிகரித்து வருவதாகத் தெரிகிறது என ஒற்றுமை அரசாங்கத்தின் தகவல் துறைக்கான அமைச்சர்  ஃபஹ்மி தெரிவித்தார்.

“தயவுசெய்து கவனமாக இருங்கள். பணத்தைப் பெறாதீர்கள். யாரேனும் பணம் கொடுக்கலாம் என்று சொன்னால், அவர் கொடுக்க மாட்டார் என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன், மேலும் நீங்கள் RM100ஐ இழப்பீர்கள்,” என்றார்.

இன்று காலை பெர்னாமா தொலைக்காட்சியின் ‘அப்பா கபார் மலேசியா’ நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்து கொண்ட பின்னர் விஸ்மா பெர்னாமாவில் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.

நேற்று முதல் சமூக ஊடகங்கள் ஊடாக வழங்கப்படும் கேஷ்-அவுட் சேவை குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டது.

நேற்று, மாலை 5 மணி நிலவரப்படி, இ-மடாணிக்கு ஏழு மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்ததாக நிதி அமைச்சகம் அறிவித்தது.

பியேர்-டு-பியேர் பரிமாற்றங்கள் மற்றும் கேஷ்-அவுட்கள் உள்ளிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு இ-மடாணி கிரெடிட்டைப் பயன்படுத்த முடியாது என்று அரசாங்கம் அறிவித்தது.

MAE, Setel, ShopeePay மற்றும் Touch ‘n Go eWallet அல்லது DuitNow QR குறியீடு வழியாக நாடு முழுவதும் உள்ள 1.8 மில்லியன் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் வணிகங்களில் பங்கேற்கும் இ-வாலட்டுகள் வழியாக மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஏழு மில்லியன் என்பது ஒரு பெரிய தொகை என்றும், அடையாள சரிபார்ப்பு மற்றும் விநியோகத்தை மேற்கொள்ள சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.

இ-மடாணி திட்டமானது 10 மில்லியன் தகுதியான மலேசியர்களுக்குப் பயனளிக்கும் என்று பிரதமர் கூறியிருந்தார், இதில் RM1 பில்லியன் ஒதுக்கீடு அடங்கும்.

– பெர்னாமா


Pengarang :