NATIONAL

போலி கூட்டரசு விருதுகள் விற்பனை- என்.ஜி.ஒ. தலைவர் உள்பட அறுவர் கைது

புத்ராஜெயா, டிச 8 – போலியான கூட்டரசு அரசின் டான்ஸ்ரீ விருதை
விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் அரசு
சாரா அமைப்பின் (என்.ஜி.ஒ.) தலைவர் உள்பட அறுவரை ஊழல் தடுப்பு
ஆணைய அதிகாரிகள் (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளனர்.

முப்பது முதல் ஐம்பது வயது வரையிலான இரு பெண்கள் உள்ளிட்ட
அந்த அறுவரும் கடந்த மாதம் 30ஆம் தேதிக்கும் இம்மாதம் 6ஆம்
தேதிக்கும் இடையே எம்.ஏ.சி.சி. தலைமையகம் மற்றும் மலாக்காவில்
கைது செய்யப்பட்டனர்.

அரசு சாரா அமைப்பின் தலைவர் இந்த கும்பலின் மூளையாகச் செயல்பட்ட
வேளையில் விருதுகளுக்கான விலையை அவரே நிர்ணயம் செய்ததாக
நம்பப்படுகிறது என்று எம்.ஏ.சி.சி. வட்டாரம் கூறியது.

இந்த கும்பல் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்ததாக
நம்பப்படுகிறது. முறையான நடைமுறைகளைக் கடைபிடிக்காமல் குறுக்கு
வழியில் விருதுகளைப் பெற விரும்பிய அறுவரை இந்த கும்பல் இதுவரை
ஏமாற்றியுள்ளது.

விருது பெற விரும்பியவர்களிடமிருந்து இக்கும்பல் பல லட்சம்
வெள்ளியை மோசடி செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. குறுக்கு
வழியில் விருதுகளைப் பெற முடியும் என வாடிக்கையாளர்களை நம்ப
வைப்பதற்காக இக்கும்பல் அரசாங்க நிறுவனம் சம்பந்தப்பட்ட
புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை பயன்படுத்தியுள்ளது.

‘டத்தோ‘ விருது பெறுவதற்கு 150,000 வெள்ளியும் ‘டத்தோஸ்ரீ‘ விருது
பெறுவதற்கு 250,000 வெள்ளயும் வசூலிக்கப்பட்ட வேளையில் ‘டான்ஸ்ரீ‘
விருதைப் பெற விரும்பிய ஒரு நபர் 12 லட்சம் வெள்ளியைக்
கொடுத்துள்ளார்.

போலியான கூட்டரசு விருதுகளை விற்பனை செய்ததன் மூலம்
அக்கும்பல் இதுவரை 20 லட்சம் வெள்ளி வரை சம்பாதித்துள்ளதாகக்
கருதப்படுகிறது.

இந்த விசாரணை தொடர்பில் இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள்
உள்பட ஐவரை தாங்கள் தேடி வருவதாக எம்.ஏ.சி.சி. கூறியது.


Pengarang :