SELANGOR

உலு சிலாங்கூரில் கட்டுபடி விலை வீடுகளை கே.எச்.எஸ்.பி. நிறுவனம் நிர்மாணிக்கும்

ஷா ஆலம், டிச 8 – உலு சிலாங்கூர் மாவட்டத்தின் பெர்ணம் ஜெயாவில்
2,300க்கும் மேற்பட்ட மாடி வீடுகளைக் கும்புலான் ஹர்த்தானா சிலாங்கூர்
பெர்ஹாட் (கே.எச்.எஸ்.பி.) அடுத்தாண்டில் நிர்மாணிக்கும்.

எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி பெசார் கழகத்தின் துணை நிறுவனமாக இந்த
சொத்துடைமை மேம்பாட்டு நிறுவனம் விளங்குகிறது.

சுமார் 77.29 ஹெக்டர் நிலப்பரப்பில் உருவாக்கப்படும் இந்த வீடமைப்புத்
திட்டம் அடுத்த ஐந்தாண்டுகளில் பூர்த்தியாகும் என்று அந்நிறுவனத்தின்
நிர்வாக அதிகாரி ரஹானா அப்துல்லா கூறினார்.

அடுத்தாண்டு மத்தியில் கட்டுமானப் பணிகளை ஆரம்பிப்பதற்கு
திட்டமிடப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்டத் தரப்பினரின் ஒப்புதலைப்
பெறுவதற்காகக் காத்திருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் இன்று இங்கு
நடைபெற்ற அந்நிறுவனத்தின் உருமாற்று நிகழ்வில் கலந்து கொண்டப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

பெட்டாலிங் ஜெயாவில் 2,091 வீடுகளை உள்ளடக்கிய ‘தி அதேரா‘ எனும்
ஆரம்பர அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தை பரமாவுண்ட் புரோபெர்ட்டி
நிறுவனத்துடன் இணைந்து கே.எச்.எஸ்.பி. நிறுவனம்
மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வீடமைப்புத் திட்டம் மூன்று புளோக்குகளை உள்ளடக்கியுள்ளதாகக்
கூறிய அவர், முதல் புளோக் கடந்தாண்டு தொடங்கப்பட்ட வேளையில் 60
விழுக்காட்டு வீடுகள் இதுவரை விற்பனையாகியுள்ளன என்றார்.

இந்த திட்டம் அடுத்த எட்டாண்டுகளில் முழுமை பெறும் என
எதிர்பார்க்கிறோம். இவ்விரு திட்டங்களின் மொத்த மேம்பாட்டு மதிப்பு 150
கோடி வெள்ளியாகும் என்றார் அவர்.


Pengarang :