SELANGOR

கடந்த வாரம் டிங்கி சம்பவங்கள் 11.2 விழுக்காடு அதிகரிப்பு- ஒருவர் மரணம்

கோலாலம்பூர், டிச 12- நாட்டில் கடந்த நவம்பர் 26 முதல் டிசம்பர் 2 வரையிலான 48வது நோய்த் தொற்று வாரத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 11.2 விழுக்காடு உயர்ந்து 2,988ஆக ஆகியுள்ளது.

அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 2,686 சம்பவங்களாக இருந்ததாகச் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமது ராட்ஸி அபு ஹசான் கூறினார்.

நாற்பத்தெட்டாவது நோய்த் தொற்று வாரத்தில் டிங்கி காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழந்ததாக அவர் இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டில் நாற்பத்தெட்டாவது நோய்த் தொற்று வாரம் வரையிலான காலக்கட்டத்தில் டிங்கி காய்ச்சல் காரணமாக உயிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக இருந்த வேளையில் இவ்வாண்டின் அதே காலக்கட்டத்தில் அந்த எண்ணிக்கை 84ஆக உயர்வு கண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

கடந்த 48வது நோய்த் தொற்று வாரத்தில் நோய்ப் பரவல் அபாயம் உள்ள 95 இடங்கள் அடையாளம் காணப்பட்ட வேளையில் அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 79ஆக மட்டுமே இருந்தது என்று அவர் சொன்னார்.

சிலாங்கூரில் மிக அதிகமாக 71 இடங்களும் கூட்டரசு பிரதேசம் மற்றும் புத்ரா ஜெயாவில் 10 இடங்களும் பேராக்கில் 8 இடங்களும் சபாவில் 4 இடங்களும் ஜொகூர் மற்றும் சரவாவில் தலா ஒரு இடமும் நோய்த்தொற்று பரவல் மிகுதியாக உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டன என்றார் அவர்.

வடகிழக்கு பருவ காலத்தில் பெய்து வரும் அதிகப்படியான மழையின் காரணமாக நோய்த் தொற்று அதிகரித்துள்ளது. இக்காலக்கட்டத்தில் நீர் தேங்குவதற்கு வாய்ப்புள்ள இடங்கள் அதிகரித்த காரணத்தால் ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கமும் அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :