NATIONAL

சாலை விபத்தில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினர் சார்பில் வழக்கறிஞர் நியமனம்

ஈப்போ, டிச 18 – காரினால் மோதப்பட்டு உயிரிழந்த தன் மகனின்
மரணத்திற்கு நீதி பெறுவதற்காக அந்த ஐந்தாம் படிவ மாணவரின்
குடும்பத்தினர் வழக்கறிஞரை நியமித்துள்ளனர்.

இங்குள்ள மேரு இடைநிலைப்பள்ளிக்கு அருகே கடந்த வெள்ளிக்கிழமை
நிகழ்ந்த அந்த விபத்தில் தன் மகனுக்கு நேர்ந்த மரணத்திற்கு உரிய நீதி
கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஹபாரிஷாம் வான் மற்றும் ஆயிஷா
முபாராக் வழக்கறிஞர் நிறுவனத்தை தாங்கள் நியமனம் செய்துள்ளதாக
அம்மாணவரின் தந்தை முகமது ஜைனால் அபிடின் (வயது 55) கூறினார்.

எனது மகனின் மரணத்திற்கு நீதி வேண்டும். விசாரணை
வெளிப்படையாகவும் எதையும் மூடி மறைக்காமலும் நடத்தப்பட
வேண்டும் என்பதுதான் எனது எதிர்பார்ப்பாகும் என்று தனது வீட்டில்
செய்தியாளர்கள் சந்தித்த போது அவர் தெரிவித்தார்.

வேண்டுமென்றே மோதித் தள்ளியது கொலை செய்வதற்கு ஒப்பானச்
செயல் என்பதால் இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின்
கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என தாம் கோரிக்கை விடுப்பதாக அவர்
குறிப்பிட்டார்.

அது விபத்து என குற்றஞ்சாட்டப்பட்டவர் வாதிட்டால் என் மகனுக்கு
அவ்வளவு மோசமான காயங்கள் ஏற்பட்டிருக்காது என்றார் அவர்.

கெடா மாநில போலீஸ் தலைமையகத்தில் துணை சூப்ரிண்டெண்டாக
பணியாற்றி வரும் 44 வயது நபர் ஓட்டிச் சென்ற பெரேடுவா அத்திவா ரகக்
கார் முகமது ஸஹாரிப் அப்பாண்டி (வயது 17) என்ற மாணவர் ஓட்டிச்
சென்ற மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதில் அவர் சம்பவம்
இடத்திலேயே உயிரிழந்தார்.


Pengarang :