NATIONAL

பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த டி.ஆர்.டி. சேவை- போக்குவரத்து அமைச்சு அறிமுகப்படுத்தும்

கோலாலம்பூர், டிச 18 – பொதுப் போக்குவரத்தை ஒன்றோடொன்று இணைக்கும் நோக்கில்  கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில்  “ஆன் டிமாண்ட் டிரான்சிட் வேன்” எனும் தேவையின் அடிப்படையிலான வேன் சேவையை (டி.ஆர்.டி.) போக்குவரத்து அமைச்சு  அறிமுகப்படுத்தவுள்ளது.

பொதுப் பேருந்து சேவைகளுக்கான குறைந்த இணைப்பைக் கொண்ட முதல் மற்றும் கடைசி மைல் பகுதியை இலக்காகக் கொண்ட இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான விவரங்களை விரைவில் அறிவிப்போம் என்று அதன் அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக 2024 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 5 கோடி வெள்ளி நிதி இத்திட்டத்திற்குத் தேவையான வேன்களை வாங்க பயன்படுத்தப்படும். பிரசரானா மலேசியா பெர்ஹாட் நிறுவனம்  இத்திட்ட செயல்பாடுகளைக் கவனிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

அனைத்து வீடமைப்புப் பகுதிகளிலும் பேருந்து வழித்தடங்கள் இல்லை என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்.  இது  இ-ஹைலிங்  எனப்படும் மின் அழைப்பு சேவையைப் போன்றது. இந்த சேவையில்  சிறப்பு வழித்தடங்கள் எதுவும் கிடையாது. எனினும்,  நாங்கள் அதனை முக்கியத்துவம் வாய்ந்த  இடங்களில் வைப்போம் என்றார் அவர்.

நேற்று  ஜசெக  கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற  கோலாலம்பூர்  ஆண்டு பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.

இந்த முயற்சியை விரிவுபடுத்தும் வகையில்  தேவை அடிப்படையிலான வேன் சேவையை வழங்கும் இதர நிறுவனங்களுடன் பிரசரானா ஒத்துழைப்பை நல்கவேண்டும் என்று போக்குவரத்து அமைச்சு விரும்புகிறது என்று லோக் தெரிவித்தார்.


Pengarang :