NATIONAL

நாடு முழுவதும் 2,948 டிங்கி சம்பவங்கள் பதிவு 

கோலாலம்பூர், டிச 20: நாடு முழுவதும் 49 வது தொற்றுநோயியல் வாரம் 2023 (ME49) இல் டிங்கி சம்பவங்கள் 1.3 சதவீதம் அல்லது 40 க்கும் குறைவாகப் பதிவாகியுள்ளன. முந்தைய வாரத்தில் 2,988 சம்பவங்கள் பதிவாகி இருந்த நிலையில் தற்போது 2,948ஆக குறைந்துள்ளது.

இந்த ஆண்டு டிங்கி சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 114,365 ஆக உள்ளது. அதாவது 54,255 சம்பவங்கள் அல்லது 90.3 சதவீதம் அதிகரித்துள்ளது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் கூறினார்.

“முந்தைய வாரத்தில் 95 ஹாட்ஸ்பாட் இடங்கள் பதிவாகியிருந்தது. தற்போது அது 101 இடங்களாக அதிகரித்துள்ளது.

“101 வட்டாரங்களில், சிலாங்கூரில் 78 இடங்கள், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா (12), பேராக் (6), சபா (3), கிளந்தான் மற்றும் சரவாக்கில் தலா ஒரு பகுதி ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டது.

ஒரே வாரத்தில் மூன்று மரண சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 87 ஆக பதிவாகியுள்ளது என டாக்டர் முஹம்மட் ராட்ஸி கூறினார்.

நோயாளிகள் தாமதமாகச் சிகிச்சை பெறுவது இறப்புகளுக்கு முக்கிய காரணமாகும் என்றார்.

எனவே, திடீரென அதிக காய்ச்சல், தசை, எலும்பு அல்லது மூட்டு வலி, கடுமையான தலைவலி, கண்களுக்கு பின்னால் வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் உடனடியாகச் சிகிச்சை பெறுமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்துகிறார்.

“இந்த அறிகுறிகளைத் தொடர்ந்து வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் ஈறுகளில் இரத்தப்போக்கு ஏற்படும் போது நிலைமை மிகவும் ஆபத்தாகுகிறது.  உடனடியாகச் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பின்னர் மரணம் ஏற்படலாம்,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :