NATIONAL

பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 31 காவல்துறையினர் இடைநீக்கம்

கோலாலம்பூர், டிச 20 – இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை பல்வேறு குற்றங்களுக்கான கோலாலம்பூர் காவல் படையின் அதிகாரிகள் உட்பட மொத்தம் 31 காவல்துறையினர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 40ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 31ஆக குறைந்துள்ளது என்று கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் டத்தோ அல்லாவுடின் அப்துல் மஜிட் கூறினார்.

“எப்பொழுதும் உங்கள் கடமைகளை நேர்மையுடன் செய்யுங்கள், ஏனெனில், நீங்கள்  காவல்துறை அதிகாரியாக மற்றும் உறுப்பினர்களாக இருக்கும் உங்களை மட்டுமின்றி,  அரச மலேசியா காவல்துறையின் அடையாளத்தை  தாங்கி நிற்கிறீர்கள்” என்று கோலாலம்பூர் காவல்துறை மாதாந்திர கூட்டத்தில் பேசும் போது கூறினார்.

காவல்துறையினர் மற்றும் உறுப்பினர்கள் தமது ஒழுக்கத்தை மேம்படுத்தும், நிலையான செயல்பாட்டு நடைமுறைகளுக்கு ஏதுவாக தனது கடமைகளை செய்ய வேண்டும் எனவும் அல்லாவுடின் தெரிவித்தார்.

மேலும், 93 காவல்துறையினர் கோப்ரல் பதவியிலிருந்து சார்ஜென்டாகவும், 34 பேர் சார்ஜென்ட் மேஜராகவும் பதவி உயர்வு பெற்றதாகவும் அவர் கூறினார்.

“பதவி உயர்வு என்பது ஒரு பெருமை அல்ல, மாறாக ஒரு நம்பிக்கை மற்றும் பொறுப்பு. எனவே, இந்த நம்பிக்கையையும் பொறுப்பையும் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு, எல்லா நேரங்களிலும் தொழில்முறை மற்றும் உயர்ந்த கட்டொழுங்குடன்  பணியாற்றுங்கள், ”என்று அவர் மேலும் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :