NATIONAL

ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சு வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சாகப் பெயர் மாற்றம்

புத்ராஜெயா, பிப் 27- ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சு வீடமைப்பு
மற்றும் ஊராட்சித் துறை அமைச்சாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 13ஆம் தேதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின்
அடிப்படையில் இந்த பெயர் மாற்றம் செய்யப்படுவதாகவும் 1969ஆம்
ஆண்டு அமைச்சர்நிலை சிறப்பு செயல்பாடுகள் சட்டத்தின் கீழ் இந்த
பெயர் மாற்றம் அதிகாரப்பூர்வமாக ஆர்ஜிதம் செய்யப்படும் என்றும்
அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.

கட்டுபடி விலையில் வீடுகளை நிர்மாணிப்பது அமைச்சின் பிரதான
இலக்குகளில் ஒன்றாக விளங்குகிறது. 12வது மலேசியத் திட்டத்தின் கீழ்
மக்களுக்கு குறிப்பாக பி40 மற்றும் எம்40 தரப்பினருக்காக நாடு முழுவதும்
500,000 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அது
தெரிவித்தது.

எட்டு அடிப்படை செயல்திட்டங்களுடன் வீடமைப்பு மற்றும் ஊராட்சித்
துறை அமைச்சின் தொலைநோக்கு மற்றும் பணி இலக்கு தொடர்ந்து
வலுப்படுத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுபடி விலை வீடமைப்புத் திட்டங்கள், நகர்புற திட்டமிடல்,
நிலவடிவமைப்பு மேம்பாடு, ஊராட்சி மன்றங்களுக்கு ஆக்கத்திறனளித்தல்,
திடக்கழிவு மேலாண்மை, சமூகத்திற்கு அதிகாரமளித்தல் மற்றும் சமூக
கடன் மற்றும் அடகு நிறுவன உருவாக்கம் ஆகியவை அந்த எட்டு
செயல்திட்டங்களாகும்.

நகர்ப்புற சமூகத்தின் நல்வாழ்வை மேம்படுத்துவது மற்றும் நீடித்த
சுற்றுச்சூழலை பேணுவது ஆகிய திட்ட இலக்குகளை அடைவதில்
வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு மடாணி அரசாங்கத்துடன்
ஓத்துழைப்பை நல்கி வருகிறது என அமைச்சின் அந்த அறிக்கை கூறியது.


Pengarang :