SELANGOR

அனுமதியின்றி ஆற்று நீரைப் பயன்படுத்திய கோழி பதனீட்டு மையம் மீது நடவடிக்கை

ஷா ஆலம், ஜன 4 – ரவாங், சுங்கை பாக்காவ் ஆற்றிலிருந்து
அனுமதியின்றி நீரை எடுத்ததற்காகக் கோழி பதனீட்டு வளாகம் ஒன்றுக்கு
எதிராக லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம்
விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.

நிலப்பரப்பு மற்றும் நிலத்தடியில் உள்ள நீரை உறிஞ்சி எடுக்கும்
நடவடிக்கைக்கு எதிராக நேற்று மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் அசா
சோதனையைத் தொடர்ந்து இந்த விசாரணை அறிக்கை
திறக்கப்பட்டுள்ளதாக லுவாஸ் கூறியது.

சுங்கை பாக்காவ் ஆற்றின் அருகே பூமியின் மேற்பரப்பிலிருந்து நீரை
குழாய் மூலம் உறிஞ்சி எடுக்கும் செயலில் அந்த கோழி பதனீட்டு
வளாகம் ஈடுபட்டு வந்தது அங்கு லுவாஸ் அதிகாரிகள் மேற்கொண்ட
சோதனையில் தெரிய வந்தது.

லுவாஸிடமிருந்து அனுமதி பெறாமல் சுங்கை பாக்காவ் ஆற்றிலிருந்தும்
நீர் எடுக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது என அந்த வாரியம் தனது
பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இக்குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட அந்த வளாகத்திற்கு அபராதம்
விதிப்பதற்கு ஏதுவாக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாகவும் அது
குறிப்பிட்டது.

இத்தகைய குற்றங்களைப் புரிவோர் விவகாரத்தில் விட்டுக் கொடுக்கும்
போக்கு கடைபிடிக்கப்படாது என்பதோடு குற்றவாளிகளுக்குக் கூடின பட்ச
அபராதமும் விதிக்கப்படும் என லுவாஸ் எச்சரித்தது.

பூமியிலிருந்து நீரை எடுப்பதற்கு முன்னர் லுவாஸ் தரப்பினரிடமிருந்து
அதற்கான அனுமதியை முறையாகப் பெறும்படி வர்த்தக வளாக
உரிமையாளர்களை அது கேட்டுக் கொண்டது.


Pengarang :