NATIONAL

ஜப்பானிய பூகம்பத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 92 பேராக உயர்வு- 242 பேரைக் காணவில்லை

தோக்கியோ, ஜன 5 – மத்திய ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தில்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 பேராக உயர்ந்துள்ளது. மேலும்
200க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இஷிகாவா பிராந்தியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நான்கு
நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட ரிக்டர் அளவில் 7.6 எனப் பதிவான
நிலநடுக்கம் உயிருடற்சேதங்களோடு சொத்துகளுக்கும் பெரும் சேதத்தை
ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் மரணமடைந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின்
எண்ணிக்கை உயர்வு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக
ஷின்ஹூவா செய்தி நிறுவனம் கூறியது. இன்று காலை 9.00 மணி
நிலவரப்படி இஷிகாவாவில் 242 காணாமல் போனதாக
அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கியூடோ செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி
ஷின்ஹூவா தெரிவித்தது.

இந்த பூகம்பத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கடலோர நகரான
வஜிமாவில் நாற்பதுக்கும் மேற்படோர் கட்டிட இடிபாடுகளில்
புதையுண்டிருக்கலாம் அல்லது சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஜப்பான் நாட்டின் தற்காப்பு படை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை
தீவிரப்படுத்தியுள்ளது. போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையின்
ஒத்துழைப்புடன் 4,600 உறுப்பினர்கள் இந்நடவடிக்கையில் பங்கு
கொண்டுள்ளனர்.

வஜிமா நகரில் பூகம்பம் ஏற்பட்ட போது உண்டான தீவிபத்தில் 48,000 சதுர
மீட்டர் அளவிலான பகுதி தீயில் அழிந்ததாகக் கியூடோ செய்தி நிறுவனம்
தெரிவித்தது.

பூகம்பத்தினால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பல சாலைகளில்
போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு உதவிப் பொருள்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


Pengarang :