NATIONAL

இழப்பை எதிர்நோக்கும் கிராம மேம்பாட்டு அமைச்சின் துணை நிறுவனங்கள் மூடப்படும்- ஜாஹிட் எச்சரிக்கை

புத்ராஜெயா, ஜன 5 – இலாபத்தை ஈட்டித் தராதக் கிராம மற்றும் வட்டார
மேம்பாட்டுத் துறை அமைச்சின் துணை நிறுவனங்கள் மூடப்படும் அல்லது
மறுசீரமைப்பு செய்யப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர்
அகமது ஜாஹிட் ஹமிடி எச்சரித்துள்ளார்.

தங்கள் நிறுவனத்தின் செயலாக்கத்தை கண்காணிக்கும்படி அமைச்சின்
கீழுள்ள அனைத்து நிறுவனங்களின் தலைவர்களும் பணிக்கப்பட்டுள்ளதாகக்
கிராம மற்றும் வட்டார மேம்பாட்டுத் துறை அமைச்சருமான அவர் தெரிவித்தார்.

அந்த நிறுவனங்களை லாபகரமானதாக ஆக்குங்கள். இலாபம் தராத
பட்சத்தில் அவை லாபகரமானதாக்குவதற்கான வழிவகைகளைச்
சம்பந்தப்ட்ட நிறுவனங்கள் ஆராய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அவ்வாறு செய்யாத பட்சத்தில் அந்நிறுவனங்கள் மூடப்பட வேண்டும்
என்பது எனது உத்தரவாகும். இழப்பை எதிர்நோக்கும் நிறுவனங்கள்
அல்லது அமைப்புகளுக்கு நாம் இனியும் நிதியளிக்க முடியாது என்பதால்
இந்நடவடிக்கை அவசியமானதாக உள்ளது என்றார் அவர்.

இலாபகரமாகச் செயல்படாத காரணத்தால் அமைச்சின் கீழுள்ள பல
நிறுவனங்கள் கடந்தாண்டு மூடப்பட்டதாகக் கூறிய அவர், அந்த
நிறுவனங்கள் பட்டியல் வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது
வெளியிடப்படும் என்றார்.

மூடப்பட்ட நிறுவனங்களை வாங்கிக் கொள்ளும்படி சம்பந்தப்பட்ட
நிறுவனங்களின் நிர்வாகங்களை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்.
அவர்கள் அமைச்சை விட்டு வெளியேற விரும்பினால் குறைந்தபட்சத்
தொகையை நாங்கள் வழங்குகிறோம் என்று நேற்று இங்கு நடைபெற்ற
செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.


Pengarang :