NATIONAL

வான் போக்குவரத்துத் துறை 2024ஆம் ஆண்டு துரித வளர்ச்சி காணும் – அந்தோணி லோக் நம்பிக்கை

சிப்பாங், ஜன 5 – வான் போக்குவரத்துத் துறைக்கு புத்துயிரளிப்பதற்கான அரசாங்கத்தின் தற்போதைய முயற்சிகளால்  அத்துறை இவ்வாண்டு வலுவான வளர்ச்சியைக் காண எதிர்பார்க்கப்படுகிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களின் அதிகரிப்பை அவர் மேற்கோள் காட்டிய அவர்,  அரசாங்கத்தின் வியூக  நடவடிக்கைகள் குறிப்பாக சீன மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தேவைகளை தளர்த்துவது இந்தத் துறைக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றார்

2024 ஆம் ஆண்டை நோக்கி பயணிக்கும் போது, உள்நாட்டு பயணத் தடங்கள் மட்டுமின்றி அனைத்துலகத் தடங்களிலும்  விமானப் போக்குவரத்துத் துறையில் சிறப்பான வளர்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதற்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் காரணமாகும். குறிப்பாக சீன மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தேவைகளை தளர்த்துவதும் அதில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று சீன புத்தாண்டுக்கான ஏர் ஆசியா நிறுவனத்தின் நிலையான குறைந்த கட்டணம் தொடர்பான அறிவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சீனா மற்றும் இந்தியா போன்ற முக்கிய சந்தைகளில் இருந்து மட்டுமல்ல, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும்  குறிப்பிடத்தக்க  பயணிகளின் வருகையை மலேசியா பதிவு செய்துள்ளதை  லோக் சுட்டிக்காட்டினார்.

ஆசிய நாடுகளுக்கிடையில் அதிகரித்துவரும் இந்த பயணச் சேவை ஒரு வழக்கமான நிகழ்வாக இருந்தாலும், இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு இடையே சிறந்த இணைப்பை வளர்க்கக்கூடிய   சாதகமான நிலையில் மலேசியா  இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :