NATIONAL

ஊழல் புகார் தொடர்பில் டாயிம் மனைவி, மகன்களிடம் எம்.ஏ.சி.சி. விசாரணை

புத்ராஜெயா, ஜன  10 –   முன்னாள் நிதியமைச்சர்    துன் டாயிம் ஜைனுடினுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு உதவ அவரின் மனைவி தோ புவான் நயிமா அப்துல் காலிட் மற்றும் அவர்களது இரு மகன்கள் இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம் ஏ.சி.சி.) தலைமையகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

நயீமா, முகமது அமீன் ஜைனுடின் மற்றும் முகமது அமீர் ஜைனுடின் ஆகியோர் தங்களின் இரண்டு வழக்கறிஞர்களுடன் காலை 10.05 மணிக்கு எம்.ஏ.சி.சி. தலைமையகத்திற்கு வந்தனர்.

வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு செய்தியாளர்களிடம்  வழங்கிய ஒரு சுருக்கமான அறிக்கையில், சட்டத்திற்கு உட்பட்டு தாமும் தன் மகன்களும் எம்.ஏ.சி.சி.க்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம் என்று  நைமா கூறினார்.

இதற்கிடையில், எம்.ஏ.சி.சி.யின நிதி மோசடி தடுப்புப் பிரிவு இயக்குநர் டத்தோ முகமது ஜம்ரி ஜைனுல் அபிடினைத் தொடர்பு கொண்டபோது, பணப்பரிவர்த்தனை மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உதவ  டாயிமின் மனைவி மற்றும் மகன்களிடமிருந்து வாக்குமூலம்  பெறப்பட்டத்தை உறுதிப்படுத்தினார்.

பண்டோரா ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் டாயிம் மீதான விசாரணை நடத்தப்படுவதாகவும் இந்த வழக்கின் விசாரணை ஆவணங்கள் கடந்த ஆண்டு பிப்ரவரியில் திறக்கப்பட்டதாகவும் எம்.ஏ.சி.சி. முன்பு கூறியிருந்தது.

பண்டோரா ஆவணங்கள் கிட்டத்தட்ட 12 மில்லியன் ஆவணங்கள் மற்றும் கோப்புகளின் கசிவு ஆகும்.  உலகின் செல்வந்தர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள் தங்கள் செல்வத்தை நாட்டிற்கு வெளியே மறைத்துள்ளது தொடர்பான ஆவணங்களை   அது அம்பலப்படுத்தியுள்ளது.


Pengarang :