SELANGOR

தாமான் பூங்கா இண்டாவில் அடிப்படை வசதிப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் நடவடிக்கை

ஷா ஆலம், ஜன 22- இங்குள்ள செக்சன் 32, தாமான் பூங்கா இண்டா மற்றும் அதன் அருகிலுள்ள லோட் நிலக் குடியிருப்பு பகுதிகளில் நிலவும் அடிப்படை வசதிப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பிரகாஷ் கடந்த சனிக்கிழமை சம்பந்தப்பட்ட பகுதியில் களம் இறங்கினார்.

ஷா ஆலம் மாநகர்மன்ற உறுப்பினர்களான திருமதி யோகேஸ்வரி சாமிநாதன், ராமு நடராஜன் மற்றும் மாநகர் மன்றத்தின் பொறியியல் பிரிவு அதிகாரிகள் உள்ளடக்கிய இந்த கள ஆய்வின் போது, அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு அடிப்படை வசதிப் பிரச்சனைகள் சட்டமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டன.

லோட் நிலங்களுக்குச் செல்லும் கனரக வாகனங்கள்  தாமான் பூங்கா இண்ட குடியிருப்பு பகுதி சாலைகளைப் பயன்படுத்தும் காரணத்தால்  அவை விரைவில் பழுதடைவது, லோட் நிலங்களில் உள்ள கால்வாய்கள் துப்புரவு செய்யப்படாததால் அப்பகுதியில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவது ஆகியவை அப்பகுதி குடியிருப்பாளர்கள் முன்வைத்த முக்கியப் பிரச்சனைகளாகும் என்று மாநகர் மன்ற உறுப்பினர் யோகேஸ்வரி கூறினார்.

இந்த பிரச்சனைகளுக்கு மாநகர் மன்றம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் ஒத்துழைப்புடன் விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரகாஷ் வாக்குறுதி அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் விதமாகக் குடியிருப்பு பகுதிகள் வழியாகச் செல்லும் வாகனங்களுக்குக் குற்றப் பதிவுகளை வெளியிடுவது மற்றும் லோட் நிலக் குடியிருப்பாளர்கள் தங்கள் இருப்பிடங்களில் உள்ள கால்வாய்களைச் சுத்தம் செய்து கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு நினைவூட்டல் கடிதங்கள் வழங்குவது  போன்ற நடவடிக்கைகளை மாநகர் மன்றம் மேற்கொள்ளவுள்ளது.
அதே வேளையில் பழுதடைந்த நிலையில் காணப்படும் தாமான் பூங்கா இண்டா சாலைகளைச் செப்பனிடுவதற்கான நடவடிக்கைகள்  விரைவில் மேற்கொள்ளப்படும் என யோகேஸ்வரி சொன்னார்.

Pengarang :