NATIONAL

திவேட் உயர் தொழில்நுட்பத் துறையில் இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்பு- ஜாஹிட் ஹமிடி வலியுறுத்து

ஷா ஆலம், ஜன 22- திவேட் எனப்படும் உயர் தொழில்நுட்ப மற்றும் தொழில் திறன் பயிற்சிகளில் (திவேட்) இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி வலியுறுத்தியுள்ளார்.

சம்பந்தப்பட்டத் தரப்பினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு இவ்விவகாரத்தில் கவனம் செலுத்துவது அவசியம் என்று தேசிய திவேட் மன்ற செயல்குழுவின் தலைவருமான அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய தொழில்திறன் கல்வி வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இந்திய சமூகத்தில் நிலவும் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

நகர்ப்புற வறுமையை ஒழிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. இதர ரூபங்களில் அத்தரப்பினருக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் மட்டும் வறுமையை ஒழிப்பது நமது நோக்கமல்ல. மாறாகக் கல்வியின் வாயிலாகப் பொருளாதார நிலையை மறுசீரமைப்பதிலும் நாங்கள் முனைப்பு காட்டி வருகிறோம் என்றார் அவர்.

இந்நாட்டில் மலாய் மற்றும் பூமிபுத்ரா சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தாலும் அனைத்து சமூகங்களுக்கும் உதவுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும். இதற்கான சிறந்த வழி கல்வியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள டி.எஸ்.ஆர். மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற 2024 ஒற்றுமைப் பொங்கல் நிகழ்வுக்கு தலைமை தாங்கிய உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அடையாளம் காணப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப திவேட் துறைகளில் செயற்கை நுண்ணறிவு, மின்சார வாகனத் தயாரிப்பு, ஹைட்ரோஜன் சார்ந்த தொழில்நுட்பம் ஆகியவையும் அடங்கும். திவேட் பட்டதாரிகள் உயர் திறன் பெற்று முக்கியத் துறைகளில் பணியாற்றுவதற்குரிய வாய்ப்பினை இந்த உயர் தொழில்நுட்பத் துறைகள் வழங்குகின்றன என்று அவர் மேலும் சொன்னார்.

ஏழ்மை நிலையிலுள்ள மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் இந்திய சமூக உருமாற்றுப் பிரிவான மித்ரா தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் எனக் கூறிய அவர், இந்திய இளைஞர்கள், பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் மற்றும் கல்வியை பாதியில் கைவிட்டவர்களுக்குத் திவேட் கல்விக் கழகங்களில் கூடுதல் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.


Pengarang :