NATIONAL

போலீஸ் சோதனையிலிருந்து தப்ப முயன்ற நைஜீரிய ஆடவர் 16வது மாடியிலிருந்து விழுந்து மரணம்

ஜோர்ஜ் டவுன், ஜன 22- போலீஸ் சோதனையிலிருந்து தப்ப முயன்ற நைஜீரிய ஆடவர் ஒருவர் தாம் தங்கியிருந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் 16வது மாடியிலிருந்து விழுந்து மரணமடைந்தார். இச்சம்பவம் இங்குள்ள பத்து உபானில் நேற்று மாலை 6.00 மணியளவில் நிகழ்ந்தது.

அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 16வது மாடியிலுள்ள ஒரு வீட்டில் போதைப் பொருள் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகப் புகார் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து பினாங்கு மாநில போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் குழு ஒன்று அங்கு அதிரடிச் சோதனை மேற்கொண்டது.

அழைப்புச் சத்தம் கேட்டு வீட்டின் கதவைத் திறந்த நைஜீரிய ஆடவர் ஒருவர் போலீசாரின் வருகையை அறிந்தவுடன் அவர்கள் உள்ளே வராத வகையில் கதவை மூடிக் கொண்டதாகத் தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரஸ்லான் அப்துல் ஹிமிட் கூறினார்.

கதவை உடைத்து உள்ளே நுழைந்த போலீசார் அங்கு சோதனையிட்ட போது அவ்வாடவரைக் காணவில்லை. எனினும், அங்கு மற்றொரு ஆடவர் காணப்பட்டதோடு அவ்வீட்டில் கணிசமான அளவு ஷாபு போதைப் பொருளும் எக்ஸ்டசி போதை மாத்திரைகளும் கண்டு பிடிக்கப்பட்டன என்றார் அவர்.

பின்னர் அந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் எனக் கருதப்படும் ஆடவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

அந்த நைஜீரிய நாட்டினர் எவ்வாறு நாட்டிற்குள் நுழைந்தனர் மற்றும் அவர்களின் போதைப் பொருள் நடவடிக்கைகள் குறித்து தாங்கள் விசாரணை மேற்கொண்டு வருதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இச்சோதனையின் போது அவ்வீட்டிலிருந்த 30 வயது நைஜீரிய நபர் கைது செய்யப்பட்ட வேளையில் உயிரிழந்த ஆடவரின் சடலம் பரிசோதனைக்காகப் பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது என்று அவர் சொன்னார்.


Pengarang :