SELANGOR

தாமான் ஸ்ரீ மூடாவில் மாதந்தோறும் மாநில அரசின் மலிவு விற்பனை- கவுன்சிலர் ராமு தகவல்

ஷா ஆலம், ஜன 22 – இங்குள்ள செக்சன் 22, தாமான் ஸ்ரீ மூடாவில் மாநில அரசின் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இவ்வாண்டு தொடங்கி மாதந்தோறும் நடத்தப்படும் என்று ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராமு நடராஜன் கூறினார்.

இவ்வாண்டிற்கான முதல் மலிவு விற்பனை இங்குள்ள எண்டோரா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட வேளையில் அடுத்து வரும் மாதங்களில் இந்நிகழ்வு இவ்வட்டாரத்தின் இதரப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அரிசி, கோழி, முட்டை போன்ற அத்தியாவசியப் பொருள்களை சந்தையை விட மலிவான விலையில் கிடைப்பதற்குரிய வாய்ப்பினை வழங்கும் இந்த விற்பனைத் திட்டத்தை சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) மேற்கொண்டு வருகிறது. இதில் பங்கு கொண்டு பயனடையுமாறு ஸ்ரீ மூடா வட்டார மக்களைக் குறிப்பாக இந்தியர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

ஸ்ரீ மூடாவில் நடைபெற்ற விற்பனைக்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாக க் கூறிய ராமு, பிற்பகல் 12.00க்குள் பெரும்பாலான பொருள்கள் விற்றுத் தீர்ந்தன என்றார்.

வங்கி உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களின் சேவை தொடர்பான தகவல்களைப் பொதுமக்களிடம் பரப்புவதற்கு இந்த மலிவு விற்பனையைப் பயன்படுத்திக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கிலான இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் ‘பி‘ கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

இந்த மலிவு விற்பனையில் கூடுதல் பொருள்களைச் சேர்ப்பதன் மூலம் இவ்வாண்டில் 6 கோடி வெள்ளி விற்பனையைப் பதிவு செய்ய பி.கே.பி.எஸ். திட்டமிட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் மூவாயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனைகளின் வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.


Pengarang :